மும்பை: மகாராஷ்டிராவில் இருந்து உத்தரப்பிரதேசத்திற்கு வெங்காயம் ஏற்றிச்சென்ற லாரி ஒன்று மாயமானது. காவல்துறையினருக்குக் கிடைத்த புகாரின் அடிப்படையில், வெங்காய லாரியை அவர்கள் வலைவீசித் தேடினர். ஒருவழியாக மத்திய பிரதேசத்தின் சிவ்புரி மாவட்டத்தில் தென்டு காவல் நிலைய எல்லைக்குள் அந்த லாரியை கண்டுபிடித்தனர். ஆனால் அதில் இருந்த ரூ.20 லட்சத்திற்கு அதிக மதிப்புள்ள வெங்காய மூட்டைகளைக் காணவில்லை.
இந்தியாவில் வெங்காய விலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இப்போது கிலோ ரூ.100க்கு விற்கப்படுகிறது. கர்நாடகா, மகாராஷ்டிர ஆகிய மாநிலங்களில் ஏற்பட்ட கனமழையால் வெங்காய விளைச்சல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் வியாபாரிகள் வெங்காயத்தை டன் கணக்கில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து வெங்காயப் பதுக்கலில் ஈடுபட்டால் அவர்கள் மீது சட்டம் பாயும் என்று மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானும் தமிழக அமைச்சர் செல்லூர் ராஜும் அண்மையில் எச்சரிக்கை விடுத்தனர். வெளிநாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்வதற்கும் மத்திய அரசு தடைவிதித்துள்ளது.
வெங்காய விலை உயர்வுக்கும் வெங்காயப் பற்றாக்குறைக்கும் வெங்காயம் பதுக்கி வைக்கப்படுவதே காரணம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் வெங்காய மொத்த சந்தையாக விளங்கும் நாசிக்கில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலத்தின் கோரக்பூருக்கு ஒரு லாரியில் 40 டன் வெங்காயம் அனுப்பப்பட்டது. ஆனால், அந்த லாரி மத்தியப்பிரதேசத்தின் வழியாக செல்லும்போது திடீரென மாயமாகி விட்டது.
இதையடுத்து, வெங்காயத்தை அனுப்பிய மொத்த வியாபாரி பிரேம்சந்த் சுக்லா, மத்தியப் பிரதேசத்திற்கு வந்து சிவ்புரி மாவட்ட எஸ்.பி. ராஜேஷ்சிங்கிடம் புகார் கொடுத்தார்.
கடைசியாக, அந்த மாவட்டத்தில் இருந்துதான் லாரி டிரைவர், பிரேம்சந்திற்கு பேசியுள்ளார். எனவே, அங்கு புகார் கொடுத்தார். லாரியில் ரூ.22 லட்சம் மதிப்புள்ள 40 டன் வெங்காயம் அனுப்பப்பட்டதாக புகாரில் கூறியிருந்தார்.
ஆனால் காவல்துறையினரால் லாரியை மட்டுமே மீட்க முடிந்தது. 40 டன் வெங்காயத்தை கொள்ளையர்கள் கடத்திச் சென்றுவிட்டனர். கடத்தப்பட்ட வெங்காயம் எங்கே என்று தெரியாமல் கண்களைக் கசக்குகின்றனர் காவல்துறையினர்.
வெங்காயத்தை மட்டும் திருடிய திருடர்கள்
இந்நிலையில் கொல்கத்தாவின் சுடகட்டா பகுதியில் கடைஒன்றில் நள்ளிரவில் புகுந்த கொள்ளையர்கள், அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த வெங்காய மூட்டைகளைத் திருடிச் சென்றுள்ளனர்.
காலையில் கடை திறக்க வந்த கடை உரிமையாளர் அக்ஷய் தாஸ், கடையின் கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்றார். அலங்கோலமாகக் கிடந்த கடையின் கல்லாப்பெட்டியைத் திறந்து பணத்தைச் சரிபார்த்தார் அக்ஷய்.
அவர் நேற்றிரவு எண்ணி வைத்த ஐம்பதாயிரம் ரூபாயில் ஒரு ரூபாய் கூட குறையவில்லை. கொள்ளையர்கள் கடையில் இருந்த வெங்காய மூட்டைகளை மட்டுமே களவாடியிருக்கின்றனர் என்பது தெரியவந்தது.
மேலும் இஞ்சி மற்றும் பூண்டு ஆகியவற்றையும் திருடியுள்ளனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.