கைதுசெய்யப்படலாம் என்ற அச்சத்தில் தலைமறைவாக உள்ள சாமியார் நித்தியானந்தா, என் மீது புகார்கள் கூறுபவர்கள் அவர்கள் பணியைச் செவ்வனே செய்கின்றனர். அதே போல் எனது பணி ஆன்மிகம். அதை நான் தொடர்ந்து செய்வேன் என்று பேசி ஒரு யூடியூப் காணொளி வெளியிட்டுள்ளார்.
வடிவேலு பாணியில் "நீ கோட்டை தாண்டி வராதே, நானும் கோட்டை தாண்டி வரமாட்டேன்" என பேசிய நித்தியானந்தா டாய், டூய் என்ற மிரட்டல்களுக்கு எல்லாம் நான் அஞ்சப்போவதில்லை என புகார்தாரர்களை குறிப்பிட்டு கிண்டலடித்துள்ளார்.
தலைமறைவாக உள்ள நித்தியானந்தா நாளொரு புகார், பொழுதொரு வீடியோ என்று வெளியிட்டு வரும் நிலையில் வடிவேலு பாணியில் புலம்பியபடி வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை. இவற்றுக்கெல்லாம் நான் ஒரு போதும் அஞ்சமாட்டேன் என அந்தக் காணொளியில் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவை சேர்ந்த ஜனார்த்தன சர்மாவின் 3 மகள்கள் ஒரு மகன் என 4 பேர் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தின் புறநகர் பகுதியான ஹிராபூரில் உள்ள நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் படிப்புக்காக சேர்க்கப்பட்டிருந்தனர். இவர்கள், ஆசிரமத்தில் வலுக்கட்டாயமாகத் தங்க வைக்கப்பட்டதும் துன்புறுத்தப்பட்டதும் காவல்துறையின் விசாரணையில் தெரியவந்தது.
ஜனார்த்தன சர்மாவின் மூன்றாவது மகளும் மகனும் மீட்கப்பட்ட நிலையில் அவருடைய இரண்டு மகள்கள் வெளிநாட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஜனார்த்தன சர்மாவின் இரண்டு மகள்களையும் வரும் 10ம் தேதிக்குள் ஒப்படைக்குமாறு ஆட்கொணர்வு மனுவின் கீழ் குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில்தான் வெளிநாட்டில் உள்ள ஜனார்த்தன சர்மாவின் மகள் நந்திதா சர்மா, தனது தந்தை ஜனார்த்தன சர்மா மீது புகார் தெரிவித்துள்ளார்.
நித்தியானந்தா மீது பொய் புகார் கொடுக்குமாறு தங்களை ஜனார்த்தன சர்மா தூண்டிவிடுவதாகக் கூறியுள்ளார்.
நித்தியானந்தாவிடம் தனிச் செயலாளராக இருந்த ஜனார்த்தன சர்மா, கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்துள்ளதாகவும், நித்தியானந்தா மீது எந்தத் தவறும் இல்லை எனவும் அந்த வீடியோவில் கூறியிருந்தார் நந்திதா சர்மா.
இதற்கிடையே நித்யானந்தா வெளிநாட்டுக்குத் தப்பி ஓடிவிட்டதாக தகவல் வெளியான நிலையில் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் குஜராத் காவல்துறையினர் களம் இறங்கியுள்ளனர். ஈகுவடாருக்கு பக்கத்தில் உள்ள ஒரு குட்டித் தீவை நித்தியானந்தா விலைக்கு வாங்கி இருப்பதாகவும் அதனை இந்து நாடாக உருவாக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதன் காரணமாகவே இந்தியாவில் உள்ள தனது அறக்கட்டளைகள், சொத்துக்கள் வங்கிக் கணக்குகள் என அனைத்திலும் இருந்தும் நித்தியானந்தா தன்னை விடுவித்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
ஈகுவடாரில் அவர் வாங்கியுள்ள அந்த தனித் தீவுக்கு கைலாஷ் நாடு எனப் பெயர் சூட்ட நித்தியானந்தா முடிவெடுத்துள்ளதாகவும், அந்த தீவில் நித்தியானந்தாவுடன் சீடர்கள் சிலரும் இருப்பதாகவும் நேப்பாளம் வழியாக அந்தத் தீவுக்கு அவர் தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் தலைமறைவாக உள்ள நித்தியானந்தா சமூக வலைத்தளங்கள் மூலம் சத்ஸங்கம் என்ற பெயரில் தினமும் மாலை தனது சீடர்களுடன் பேசி வருகிறார். அதன்படி நித்தியானந்தா மீண்டும் வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதில் அவர், தன் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானது என்பது அனைவருக்கும் தெரியும் எனவும், காலபைரவர் பாதுகாப்பில் தான் பத்திரமாக இருப்பதாகவும் அந்த வீடியோவில் நித்தியானந்தா தெரிவித்துள்ளார். நானே சிவபெருமான். நீதிமன்றத்தால் என்னை ஒன்றும் செய்யமுடியாது என்றும் அவர் காணொளியில் நகைச்சுவையாகத் தெரிவித்துள்ளார்.