மும்பை: மகாராஷ்டிரா மாநில சட்டசபை சபாநாயகராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நானா பட்டோலே நேற்று போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே அரசின் மீது சனிக்கிழமை சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 169 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவாக வாக்களித்தனர். இந்நிலையில் அம்மாநில சட்டசபை சபாநாயகர் பதவிக்கு சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் சார்பில் நானா பட்டோலே வேட்பு மனு தாக்கல் செய்தார்.
பாஜக சார்பில் கிஷன் கத்தோர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். சட்டசபையில் பாஜகவின் பலம் குறைவாக உள்ள நிலையில் நேற்று காலை கிஷன் கத்தோர் வேட்பு மனுவை திரும்பப் பெற்றுக்கொண்டார். இதனை அடுத்து, சட்டசபை சபாநாயகராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நானா பட்டோலே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
புதிய சபாநாயகராக பொறுப்பேற்கும் நானா பட்டோலே(56) விதர்பா பகுதியில் உள்ள சக்கோலி சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு 3 முறை எம்.எல்.ஏ.வாகவும் பன்டாரா-கோன்டியா பாராளுமன்ற தொகுதி எம்.பி.யாகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நானா பட்டோலே பாரதீய ஜனதா எம்.பி.யாக பதவி வகித்தவர். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாரதீய ஜனதா தலைவர்களுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து பதவியை ராஜினாமா செய்து விட்டு காங்கிரசில் இணைந்தார். அந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக சகோலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று உள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் நானா பட்டோலே, மராட்டிய சட்டசபையின் சபாநாயகராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதையடுத்து அவை உறுப்பினர்களை நோக்கி அவர் வணக்கம் செலுத்தினார். அவரை முதலமைச்சர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் வழிநடத்தி சென்று சபாநாயகர் இருக்கையில் முறைப்படி அமரவைத்தனர்.
மாநில சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.