பேராயர் முலக்கல் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணைக்கு வந்தது

 

மும்பை :ஜலந்தரின் முன்னாள் பேராயர் பிராங்கோ முலக்கல் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு இன்று காலை கேரளாவின் கோட்டயத்தில் தொடங்கியது. 

கன்னியாஸ்திரி ஒருவரை 2014ஆம் ஆண்டுக்கும் 2016ஆம் ஆண்டுக்கும் இடையில் பல முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். 

பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு நீதி கோரி ஐந்து கன்னியாஸ்திரிகள் 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் போராட்டம் நடத்தியபோது இதுபற்றிய செய்தி வெளியானது. இதனைத் தொடர்ந்து பேராயர் முலக்கல் கைது செய்யப்பட்டார். மூன்று வாரங்களுக்குப் பிறகு பிணையில் விடுவிக்கப்பட்ட அவர்மீதான குற்றச்சாட்டு நிரூபனமானால், அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம். 

தான் நிரபராதி எனக் கூறிவரும் முலக்கல், தனது பதவியிலிருந்து விலகினார். தன்மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும் ஜோடிக்கப்பட்டவை என்றும் அவர் கூறி வருகிறார். 

அந்தக் கன்னியாஸ்திரிக்குக் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும், அவரைப் பதவியிலிருந்து விலக்கியதற்காகத் தன்னைப் பழிவாங்குகிறார் என்றும் பேராயர் குற்றம் சாட்டுகிறார். 

காலைநேரப் பிரார்த்தனைக்குப் பிறகு பேராயரின் ஆதரவாளர்கள் அவருடன் நீதிமன்றத்திற்குத் துணையாகச் சென்றனர். ஜனவரி 6ஆம் தேதி நடைபெறவிருக்கும் அடுத்த விசாரணை வரை அவரது பிணையை நீதிமன்றம் நீட்டித்தது.