பலாத்காரம் செய்ய முயன்றவர் நிர்வாணமாக தெருவில் இழுத்துச்செல்லப்பட்டார்

35 வயது ஆடவர் ஒருவர் நான்கு வயது சிறுமியை நாக்பூரில் உள்ள பர்தி பகுதியிலுள்ள அவளது வீட்டில் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதன் காரணமாக  அந்த ஊர் மக்களால் தாக்கப்பட்டார்.

குற்றவாளியை அடித்து, கயிற்றால் கைகளைக் கட்டி, முற்றிலும் ஆடையில்லாமல் தெருவில் ஊர்வலம் போகச் செய்ய வைத்த பின்னரே நாக்பூர் மக்கள் அவரை போலிசாரிடம் ஒப்படைத்ததாக அதிகாரி ஒருவர் கூறினார்.

நகரத்தில் அமைந்துள்ள கூட்டுறவுச் சங்க வங்கியில் தினசரி பணம் திரட்டும் முகவராகத் திரு ஜவஹர் வைத்தியா பணியாற்றுகிறார்.

பணம் திரட்டுவதற்காகத் தினமும் அச்சிறுமியின் வீட்டிற்கு வைத்தியா செல்வார். ஞாயிற்றுக்கிழமை மாலை தனியாக இருந்த அச்சிறுமியை அவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றபோது, திடீரென்று அங்கு வந்த அச்சிறுமியின் தாயார் கூச்சலிட்டுச் சத்தம் போட்டதைத் தொடர்ந்து அண்டை வீட்டுக்காரர்கள் அந்த இடத்துக்கு விரைந்தனர் என்று அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

இச்சம்பவம் குறித்த செய்தி சுற்றுவட்டாரத்தில் வசித்த மக்களுக்குப் பரவியதை அடுத்து உள்ளூர் மக்கள் ஜவஹர் வைத்தியாவைத் தாக்கினர்.

இந்தியக் குற்றவியல் சட்டம், பாலியல் குற்றங்களிலிருந்து சிறுவர்களைப் பாதுகாக்கும் சட்டம் ஆகியவற்றின் பல்வேறு பிரிவுகளின்கீழ் பர்தி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.