பிரணவ்வின் காலைப் பிடித்து ‘கைகுலுக்கிய’ ரஜினி

கைகள் இரண்டும் இல்லாமல் கால்களால் ஓவியம் தீட்டி சாதனை படைத்து வரும் ஓவியர் பிரணவ், கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் நிவாரண நிதியை கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் அளித்தார். அந்த நிகழ்வு பற்றிய செய்திகள் சமூக ஊடகங்களில்  பரவின.

அதனையடுத்து, தமது சமூக ஊடகப் பதிவு ஒன்றில் நடிகர் ரஜினிகாந்தைச் சந்திக்க ஆசைப்படுவதாக பிரணவ் தெரிவித்திருந்தார். 

தகவல் அறிந்த கராத்தே தியாகராஜன், ரஜினிகாந்தை ஓவியர் பிரணவ் சந்திக்க ஏற்பாடு செய்தார்.

கடந்த திங்கட்கிழமை (டிசம்பர் 2) மாலை 5.30 மணியளவில் நடிகர் ரஜினி காந்தை அவரது இல்லத்தில் பிரணவ் சந்தித்தார். 

தான் கால்களால் வரைந்த ரஜினி ஓவியம் ஒன்றை ரஜினிக்கு  வழங்கினார் பிரணவ். 

அதனைப் பெற்றுக்கொண்ட ரஜினி பிரணவ்வின் காலை தன் கையால் பிடித்துக் குலுக்கி கட்டிப்பிடித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடு ஓவியர் பிரணவ்வுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

அந்தச் சந்திப்பின்போது தனது லட்சியம், கனவு, குடும்பம் போன்றவை தொடர்பாகவும் ரஜினியிடம் பேசினார் பிரணவ். 

இதுகுறித்து காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள பிரணவ், அதில்,  “நான் வாழ்க்கையின் மிகவும் மகிழ்ச்சியான ஒரு தருணத்தில் இருக்கிறேன். உலகத்தின் ஒரே சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்தைச் சந்தித்துள்ளேன். எனக்கு பொன்னாடை போர்த்தினார். என் காலைப்பிடித்துக் குலுக்கினார், கட்டிப்பிடித்தார், செல்பி எடுத்தார்.

“எனக்கு எப்போதும் துணையாக இருப்பேன் என்றார். இப்படியெல்லாம் நடக்கும் என்று நான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை,” என பிரணவ் மனமுருகக் கூறி உள்ளார்.
 

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity