பசியைப் போக்க மண்ணைத் தின்ற சிறுவர்கள்; பிரியாவிடை கொடுத்து அனுப்பி வைத்த தாய்

கேரளாவில் பசிக் கொடுமையைத் தாங்கமுடியாமல் மண்ணை அள்ளி சிறுவர்கள் இருவர் சாப்பிட்டதைக் காட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வலம் வந்தது.

அதன் தொடர்பில் திருவனந்தபுரம் குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலருக்குத் தகவல் கிட்டியது. 

திருவனந்தபுரத்துக்கு அருகில் உள்ள கதமுக்கு எனும் ஊரில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததைக் கண்டுபிடித்து அதிகாரிகள் அங்கு சென்றனர்.

குப்பை கூளங்கள் நிறைந்த பகுதியில் தார்ப்பாய்களைக் கொண்டு மறைத்த இடத்துக்குள் ஆறு பிள்ளைகளுடன் வசித்து வந்தார் ஸ்ரீதேவி.

முதல் குழந்தைக்கு வயது 7. ஆகச் சிறிய குழந்தை பிறந்து மூன்று மாதங்களே ஆன நிலையில், அந்தக் குழந்தைக்குப் பால் கொடுப்பதற்குக் கூட சக்தியற்ற நிலையில் இருந்தார் தாயார் ஸ்ரீதேவி.

 ஸ்ரீதேவியின் கணவர் மது போதைக்கு அடிமையானவர் என்றும் கூலிவேலை செய்யும் அவரது சம்பளத்தை அவர் குடும்பச் செலவுக்குத் தருவதில்லை என்றும் கூறப்பட்டது. 

அவர்களது வசிப்பிடத்துக்குச் சென்று பார்த்த அதிகாரிகள் அங்கு சமைத்து பல நாட்கள் ஆகியிருக்கலாம் என்பதை ஊகிக்க வெகுநேரம் பிடிக்கவில்லை. அடுப்பில் சுடுநீர் மட்டும் இருந்தது.

இதனையடுத்து ஸ்ரீதேவிக்கு உதவ நடவடிக்கை எடுக்கப்பட்டது. திருவனந்தபுரம் மேயர் ஸ்ரீகுமாரும் தகவலறிந்து உதவ முன்வந்தார்.

உடனடியாக அங்கு சென்று ஆய்வுசெய்த சைல்டு லைன் அதிகாரிகள் ஏழு வயதும் ஐந்து வயதும் ஆன இரண்டு மகன்கள், நான்கு வயதும் இரண்டு வயதும் ஆன இரண்டு பெண் குழந்தைகள் ஆகியோரைக் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

தாய்ப்பால் குடிக்கும் கடைசி இரண்டு குழந்தைகளையும் தாயிடமிருந்து பிரிக்கவில்லை. பின்னர், அனைவருக்கும் உணவு வாங்கிக் கொடுத்தனர். 
“என் கணவர் மீது நான் புகார் கொடுக்க விரும்பவில்லை. அதேநேரம், என் குழந்தைகள் வயிறார உணவு உண்டு ஆரோக்கியமாக இருந்தால் போதும்” என்று கூறி, குழந்தைகளைக் காப்பகத்துக்கு அனுப்பி வைத்தார் ஸ்ரீதேவி.

ஸ்ரீதேவிக்கு மாநகராட்சியில் தற்காலிக வேலைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி குடியிருப்பில் ஸ்ரீதேவி குழந்தைகளுடன் வசிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

ஸ்ரீதேவியின் கணவர் குஞ்சுமோனை அதிகாரிகள் தேடிப்பிடித்தபோது அவர் மதுபோதையில் இருந்தார். அவருக்கு அதிகாரிகள் எச்சரிக்கை கலந்த அறிவுரை வழங்கி உள்ளனர்.
 

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity