மாநிலங்களவைக்கு வராத உறுப்பினர்கள்: துணை அதிபர் வெங்கையா கடும் அதிருப்தி

புதுடெல்லி: மாநிலங்களவையில் கேள்வி எழுப்பும் உறுப்பினர்கள், அவற்றுக்கான பதில்களைப் பெறுவதற்கு கண்டிப்பாக அவைக்கு வர வேண்டும் என துணை அதிபர் வெங்கையா நாயுடு வலியுறுத்தி உள்ளார்.

நாடாளுமன்றக் கூட்டத்தொடரின்போது அவைக்கு வராத உறுப்பினா்களின் பெயா்களை ஊடகங்கள் வெளியிட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாநிலங்களவையில் முக்கிய கேள்விகளை எழுப்பிய உறுப்பினர்கள் சிலர், அவற்றுக்கான பதிலைப் பெற கடந்த திங்கட்கிழமை அவைக்கு வரவில்லை.

இதனால் அதிருப்தி அடைந்த மாநிலங்களவைத் தலைவருமான வெங்கையா நாயுடு, வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமையன்று உறுப்பினா்கள் அவைக்கு வராதது தீவிரமான விவகாரம் என்றார்.

“அவையில் இன்று 15 முக்கியமான கேள்விகள் பட்டியலிடப்பட்டிருந்தன. ஆனால், அவற்றை எழுப்பிய உறுப்பினா்கள் அவைக்கு வருகை தரவில்லை. 

“கேள்விகளை எழுப்பிய பிறகு, அதற்கு பதில் பெற வேண்டிய நிலையில் அவா்கள் அவையில் இல்லை. இத்தகைய நிகழ்வு மீண்டும் ஏற்பட்டதற்காக கவலைப்படுகிறேன்,” என்றார் வெங்கையா நாயுடு.

கேள்வி எழுப்பியிருந்த ஏழு உறுப்பினா்களும் எதிா்க்கட்சிகளைச் சோ்ந்தவா்கள் ஆவர்.