ப.சிதம்பரத்துக்கு நிபந்தனைகளுடன் பிணை

ஐஎன்எக்ஸ் மீடியா சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்திற்கு உச்ச நீதிமன்றம்  பிணை வழங்கியுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. அதன் தொடர்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி கைது செய்யப்பட்ட சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். 

சிபிஐ வழக்கில் உச்ச நீதிமன்றம் சிதம்பரத்திற்கு பிணை வழங்கியபோதும் அமலாக்கத்துறை அவரை உடனே கைது செய்தது. 

அமலாக்கத்துறை வழக்கில் பிணை கிடைக்காததால் தொடர்ந்து திகார் சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் பிணை கோரி ப.சிதம்பரம் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. 

அந்தத் தீர்ப்பை எதிர்த்தும், பிணை வழங்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார். 

அந்த மனு மீதான விசாரணை கடந்த மாதம் 28ஆம் தேதி நிறைவடைந்ததையடுத்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இவ்வழக்கில் நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. 

அப்போது ப.சிதம்பரத்துக்கு நிபந்தனைகளுடன் பிணை வழங்குவதாக நீதிபதிகள் அறிவித்தனர். 

சாட்சிகளைக் கலைக்க முயற்சி செய்யக் கூடாது, ஆதாரங்களைத் திரட்ட முயற்சி செய்யக் கூடாது, சாட்சிகளைச் சந்திக்க கூடாது, கடவுச்சீட்டை உச்ச நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும், அனுமதி இன்றி வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளக் கூடாது, வழக்கு குறித்து பத்திரிக்கைகளில் பேட்டி அளிக்கவோ அறிக்கைகள் வெளியிடவோ கூடாது என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளன.

சிறை நடைமுறைகள் முடிந்து, இன்று மாலை ப.சிதம்பரம் சிறையில் இருந்து வெளியே வரலாம் எனக் கூறப்பட்டது.

106 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு  அவர் வெளியே வருவதை அடுத்து அவரது குடும்பத்தாரும் காங்கிரஸ் கட்சியினரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இந்தியாவின் அசாம் மாநிலம், கௌஹாத்தி நகரில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிடும் ஆர்ப்பாட்டக்காரர்கள். படம்: ஏஎஃப்பி

14 Dec 2019

குடியுரிமை சட்டத் திருத்தப் போராட்டம் : மூவர் உயிரிழப்பு