அதிர்ஷ்டத்துக்கு மேல் அதிர்ஷ்டம்: அன்று லாட்டரியில் ரூ.6 கோடி; இன்று 6 பானைகளில் நாணயப் புதையல்

கேரளாவில் ரூ.6 கோடி லாட்டரி பரிசு பெற்ற முன்னாள் பஞ்சாயத்து கவுன்சிலருக்கு ஆறு பானைகளில் நாணயப் புதையல் கிடைத்துள்ளது. 

அறுபது வயதான அவர் அந்தப் பகுதியில் முன்பு கவுன்சிலராக இருந்தவர் என்று கூறப்படுகிறது.

திருவனந்தபுரம் அருகே உள்ள கிளிமானூர் பகுதியைச் சேர்ந்த ரெத்தினாகரன் பிள்ளைக்கு 2018ஆம் ஆண்டு கேரள அரசின் கிறிஸ்துமஸ் பம்பர் லாட்டரி குலுக்கலில் முதல் பரிசான ரூ.6 கோடி கிடைத்தது.

அதன் மூலம் திருப்பாற்கடல் கிருஷ்ணசுவாமி கோவில் அருகே ஒரு பழைய வீட்டையும், அதன் அருகே சிறிது நிலத்தையும் விலைக்கு வாங்கினார்.

அந்த நிலத்தில் விவசாயப் பணி செய்யத் திட்டமிட்ட ரெத்தினாகரன் பிள்ளை, தொழிலாளர்களைக் கொண்டு நிலத்தை அகழ்ந்து சீர் செய்தார். அப்போது பூமிக்குள் மண் பானைகள் புதைந்து இருந்தது தெரிய வந்தது.

புதைந்திருந்த ஆறு பானைகளைத் திறந்து பார்த்தபோது ஏராளமான செப்பு நாணயங்கள் காணப்பட்டன. 

புதையல் கிடைத்த தகவல் அக்கம், பக்கத்தில் பரவியதால் அங்கு பொது மக்கள் கூடினர்.  இந்தத் தகவல் கிளிமானூர் போலிசாருக்குத் தெரிவிக்கப்பட்டது. 

அரசு அதிகாரிகளும் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

அந்தப் பானைகளில் மொத்தம் 2,600 செப்பு நாணயங்கள் இருந்தன. 

திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் பாலராமவர்ம மகாராஜா காலத்து நாணயங்கள் அவை என்பது தெரியவந்துள்ளது. 

அந்த நாணயங்களை அரசிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity