புதுடெல்லி: இந்தியாவின் குஜராத் போலிசார் தீவிரமாக தேடி வரும் சர்ச்சை சாமியார் நித்தியானந்தா சொந்தமாக ஒரு நாட்டையே உருவாக்கி இருப்ப தாக Kailaasa.org என்ற இணையத் தளம் தெரிவிக்கிறது.
‘கைலாயம்’ என்று குறிப்பிடப்படும் அந்த நாடு, இந்து சுயாதிபத்திய நாடு என்றும் அதற்கான அரசமைப்புச் சட்டம், கொடி, சின்னம் எல்லாம் உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் அந்தத் தளம் குறிப்பிடுகிறது.
நன்கொடை வழங்குவோர் அந்த நாட்டின் குடியுரிமையைப் பெறலாம் என்றும் மாபெரும் இந்து தேசத்தின் குடியுரிமையைப் பெற இப்போது மக்களுக்கு வாய்ப்பு கிட்டி இருப்பதாகவும் அந்த இணையத் தளம் தெரிவித்ததாக ஊடகங்கள் குறிப்பிட்டு இருக்கின்றன.
அந்த இணையத் தளம் 2018 அக்டோபர் 21ஆம் தேதி உருவாக்கப்பட்டு இருக்கிறது என்று இணைய வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். 2019 அக்டோபர் 10ஆம் தேதி கடைசியாக அந்தத் தளத்தில் பல தகவல்களும் பதிவேற்றப்பட்டு இருக்கின்றன. அந்தத் தளம் தென் அமெரிக்க நாடான பனாமா நாட்டில் பதியப்பட்டு இருக்கிறது.
அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் அதன் முகவரி குறிப்பிடப்பட்டு உள்ளது. இவ்வளவு விவரங்கள் வெளியாகி இருக்கும் போதிலும் நித்தியானந்தாவின் கைலாயம் எங்கு அமைந்துள்ளது என்பது தெரியவில்லை.
சொந்த நாட்டில் இந்து சமயத்தை தழுவுவதற்கு உரிமைகள் மறுக்கப்படும் உலக மக்கள் யாரும் குடியேற தோதாக எல்லையில்லாத ஓர் உலகம் கைலாயம் என்று அந்த இணையத்தளம் குறிப்பிட்டது.
புதிய நாட்டிற்கான இயக்கம் அமெரிக்காவில் நிறுவப்பட்டு இந்து ஆதி சைவர்களால் நிர்வகிக்கப்படுகிறது என்றாலும் இந்தப் புதிய கைலாய பூமி, சாதி, மதம், ஆண், பெண் என்ற பாகுபாடு எதுவுமின்றி எல்லா இந்துக்களுக்கும் பொதுவானது என்று அந்த இணையத் தளம் தெரிவிக்கிறது.
புதிய நாட்டு கொடியின் பெயர் ‘ரிஷப துவஜா’ என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதில் நித்யானந்தா சிவபெருமானாக நந்தியுடன் தோன்றுகிறார். கைலாயம் நாட்டுக்கு கல்வி, கருவூலம், வர்த்தகம் உள்ளிட்ட பல துறைகளையும் உள்ளடக்கிய அரசாங்கம் அமைந்துள்ளது. அதற்குப் பிரதமரும் நியமிக்கப்பட்டு இருக்கிறார். சனாதன இந்து தர்மத்திற்குப் புத்துயிர் ஊட்ட பாடுபடும் ‘அறிவொளி நாகரீகத் துறை’ என்ற ஒரு துறையும் அந்த அரசில் இடம்பெற்று இருக்கிறது.
நித்தியானந்தா தோற்றுவித்து இருக்கும் நாட்டில் தர்மப் பொருளியல் நடப்பில் இருக்கும். இந்து முதலீட்டு மற்றும் காப்பு வங்கி உருவாக்கப்படும். இணைய நாணயமும் ஏற்றுக்கொள்ளப்படும்.
கைலாயம் நாட்டிற்குச் சொந்த பாஸ்போர்ட் உருவாக்கப்பட்டு உள்ளது. யார் வேண்டுமானாலும் குடியுரிமை கேட்டு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தன்னுடைய புதிய நாட்டை அங்கீகரிக்கும்படி கேட்டு நித்யானந்தா சார்பில் ஐநா அமைப்பிடம் மனுத் தாக்கல் செய்யப்பட்டு இருப்ப தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நித்தியானந்தா தன்னுடைய கைலாயத்தை அநேகமாக தென் அமெரிக்காவில் இருக்கும் ஈகுவேடார் நாட்டுக்குச் சொந்தமான ஒரு தீவை வாங்கி உருவாக்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதேேவளையில், பனாமாவில் இருக்கும் தீவு ஒன்றை அவர் வாங்கி இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
திருவண்ணாமலையைச் சேர்ந்த நித்தியானந்தா மீதும் அவர் இந்தியாவில் நடத்தி வந்த ஆசிரமம் மீதும் குழந்தைகள் கடத்தல், பாலியல் கொடுமை, ஆசிரமத்திற்கு நன்கொடை வசூல் செய்ய சிறார்களைத் துன்புறுத்தியது போன்ற பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதைத் தொடர்ந்து, அகமதாபாத் போலிஸ் நித்யானந்தாவைத் தேடி வருகிறது. அவரது ஆசிரமும் மூடப்பட்டுள்ளது.