புதுடெல்லி: நிலவில் விழுந்து நொறுங்கிய விக்ரம் நிலவு வண்டியை, (லேண்டர்) தமிழரின் ஆய்வு மூலம் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா கண்டுபிடித்து அறிவிக்கும் முன்பே, இஸ்ரோ கண்டறிந்துவிட்டதாக அதன் தலைவர் சிவன் கூறினார்.
விக்ரம் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி நிலவில் தரையிறங்க முயன்ற போது, கட்டுப்பாட்டை இழந்து நிலவின் மேற்பரப்பில் விழுந்தது.
சந்திரயான் 2 விண்கலம் மூலமாக செலுத்தப்பட்ட அதைக் கண்டுபிடிக்க இஸ்ரோ முயன்றது.
இதேபோன்று, கடந்த 2009ஆம் ஆண்டு அனுப்பிய தனது கலன் மூலமாக, நாசாவும் விக்ரம் வண்டியைக் கண்டுபிடிக்க முயன்று வந்தது.
நிலவில் விழுந்து நொறுங்கிச் சிதறிய சந்திரயான் இரண்டின் விக்ரம் பகுதிகளை, நாசா எடுத்த புகைப்படங்கள் மூலமாக தமிழகத்தைச் சேர்ந்த சண்முக சுப்பிரமணியன் என்ற பொறியாளர் கண்டுபிடித்ததாக நாசா உறுதிப்படுத்தி அறிவித்தது. அனால் இதை மறுத்த இஸ்ரோ, தான் அதை முன்பே கண்டுபிடித்ததாகத் தெரிவித்தது.