கடத்தப்பட்டு பாஜகவில் சேர்த்ததாக காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி வசந்தகுமார் புகார்

கடத்தப்பட்டு பாஜகவில் சேர்த்ததாக காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி வசந்தகுமார் புகார்

2 mins read

பெங்களூரு: கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் நடைபெற்று வந்த காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி ஆட்சியில், 15 எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகினர். இதனால் 14 மாதங்களே நீடித்த குமாரசாமி அரசு கவிழ்ந்தது. அரசுக்கு எதிராகச் செயல்பட்டதால் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 17 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி, தகுதிநீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் உதவியைப் பெற்று சட்டவிரோதமான ஆட்சியை பாரதிய ஜனதா கட்சி அமைத்தது.

காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சி சட்டமன்ற உறுப்பினர்களையும் உத்தரவை மீறிய சட்டமன்ற உறுப்பினர் என்.மகே‌ஷையும் பாஜக விலைக்கு வாங்கியது என மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார். பாஜக குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது என்ற குற்றச்சாட்டும் எழுப்பப்பட்டது. ஆனால் அதனை அக்கட்சி மறுத்து வந்தது.

இந்நிலையில், தகுதி நீக்க சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்து இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றனர். கர்நாடகாவில் 15 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடந்தது.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகியான ஆர். வசந்தகுமார் கடந்த 2 நாட்களுக்கு முன் பாஜகவில் இணைந்து விட்டார் என செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், அவர் மீண்டும் காங்கிரசில் தன்னை இணைத்துக் கொண்டார். இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக தலைவர்கள் என்னை முதலமைச்சர் இல்லத்திற்கு தூக்கிக்கொண்டு போய், திடீரென அக்கட்சியில் இணைத்து விட்டனர் என்று கூறியுள்ளார்.

நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் அவருடன் இருந்த காங்கிரசின் மூத்த தலைவர் தினேஷ் குண்டுராவ் பேசும்பொழுது, பாஜக என்ன செய்து கொண்டு இருக்கிறது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு. அவர்களது தலைவர்கள் மீதே அவர்களுக்கு எந்த நம்பிக்கையுமில்லை. அவர்கள் எங்களுடைய தலைவர்களைக் கடத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்கள் எங்கள் கட்சியின் ஆர்.வசந்தகுமாருக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர். ஆனால் அவர் மீண்டும் எங்களிடமே திரும்பி வந்து விட்டார்.

இதுபோன்ற ஆள்கடத்தல் செயலில் ஈடுபடுவதைப் பாஜக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.