ஏர் இந்தியா பங்குகளை விற்க சட்டத்தில் திருத்தம்

ஏர் இந்தியா பங்குகளை விற்க சட்டத்தில் திருத்தம்

2 mins read
46b338a4-073e-4378-aa4b-2e6e9e122214
-
Google News Preferred Icon

புதுடெல்லி: இந்தியாவின் பெருமை மிகு சின்னமாக விளங்கிய 'ஏர் -இந்தியா' பெரும் நட்டத்தில் இயங்கி வருவதால் அதன் பங்குகளை விற்கவும் முதலீடுகளை ஈர்க்கவும் இந்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

நட்டத்தில் செயல்படுவதால் 'ஏர்-இந்தியா'வின் பங்குகளை வாங்க, உள்நாட்டு நிறுவனங்கள் ஆர்வம் காட்டாததால் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சலுகைகள் அளித்து முதலீடுகளை ஈர்க்க அரசு முடிவு செய்துள்ளது.

'ஏர்-இந்தியா'வின் நூறு விழுக்காடு பங்குகளை விற்பனை செய்யவும் அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிறுவனத்திற்கு தற்போது, 57,000 கோடி ரூபாய் கடன் உள்ளது. இதையடுத்து, பொதுத்துறை நிறுவனமான ஏர் - இந்தியாவுக்கு சொந்தமான 76% பங்குகளை விற்பனை செய்துவிட்டு 24 விழுக்காடு பங்குகளை மட்டும் வைத்துக் கொள்ள பிரதமர் மோடி தலைமை யிலான அரசு, கடந்த ஆண்டு முடிவு செய்தது.

ஆனால், பங்குகளை வாங்கு வதற்கு உள்நாடு மற்றும் வெளி நாடுகளைச் சேர்ந்த விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் ஆர்வம் காட்டவில்லை. இதற்கு, வெளிநாடுகளைச் சேர்ந்த விமானப் போக்குவரத்து சேவை நிறுவனங்கள் இங்கு 49 விழுக்காடு பங்குகளை மட்டுமே வாங்க முடியும் என்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

மேலும் விமான போக்குவரத்து துறை அல்லாமல் பிற துறை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் 49 விழுக்காட்டுக்கு மேல் பங்குகளை வாங்க வேண்டுமானால் மத்திய அரசின் அனுமதியைப் பெற வேண்டும். இது போன்ற காரணங்களால் ஏர் - இந்தியா நிறுவன பங்குகளை வாங்குவதற்கு வெளிநாட்டு நிறு வனங்கள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் இந்த சட்ட திட்டத்தை சற்றுத் தளர்த்தினால் ஏர் - இந்தியா பங்கு விற்பனையில் முன்னேற்றம் ஏற்படும் என மத்திய அரசு கருதுகிறது.