தீ விபத்து; கட்டட உரிமையாளர் கைது

புதுடெல்லி: டெல்லி ஜான்சி ராணி வணிகப் பகுதியில் அமைந்துள்ள அனாஜ் மண்டி எனும் தொழிற்சாலையில் நேற்று அதிகாலை மூண்ட தீ விபத்து தொடர்பாக கட்டட உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் சிக்கி 43 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் உயிரிழப்பு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. 

மின் கசிவுக் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுவதால் போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

மேலும் தீ விபத்து தொடர்பாக கட்டட உரிமையாளர் மீது 304 சட்டப்பிரிவின் கீழ் டெல்லி போலிசார் வழக்குப்பதிவு செய்தனர். 

இது தொடர்பாக விளக்கம் அளித்த டெல்லி காவல்துறை துணை ஆணையர் மோனிகா பரத்வாஜ்,  “டெல்லி தீ விபத்து தொடர்பாக கட்டட உரிமையாளர் ரெஹான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்,” என்றார்.

இந்த நிைலயில் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, டெல்லி கோர விபத்தில் பலியானவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.

“டெல்லி தீ விபத்து செய்தி என்னை அதிர்ச்சியடைய வைத்து உள்ளது. படுகாயமடைந்தவர்கள் அனைவரும் அதிகாரிகளால் காப்பாற்றப்படுவார்கள். மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் காங் கிரஸ் கட்சியினர் உதவ வேண்டும்,” என்று  அவர் கேட்டுக் கொண்டார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தீ விபத்தில் பாதிக்கப் பட்டு எல்என்ஜேபி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் பேசிய அவர், “ஒரு வருக்கு 50% மேலான தீக்காயம் ஏற்பட்டுள்ளது. எட்டு பேர் மூச்சுத் திணறல் காரணமாக பாதிக்கப் பட்டுள்ளனர். மேலும் 15 பேருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. தீ விபத்து தொடர்பாக உரிய விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளேன்,” என்றார்.