சுடச் சுடச் செய்திகள்

குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: அசாமில் வலுக்கும் போராட்டம்

சில அண்டை நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினர், இந்திய குடியுரிமை கோரி வருவதை எளிதாக்கும் புதிய மசோதாவுக்கு எதிராக வன்முறை ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன. 

நிலைமையைச் சமாளிக்க இந்தியா ஆயிரக்கணக்கில் ராணுவத்தினரை அதன் வடகிழக்கு மாநிலமான அசாமுக்கு அனுப்பியுள்ளது.

நெருக்கடிக்குள்ளான சிறுபான்மையினரைப் பாதுகாக்கவே குடியுரிமை திருத்த மசோதா கொண்டுவரப்பட்டதாக பிரதமர் நரேந்திர மோடியின் அரசு தெரிவித்தது.

நாட்டின் சமயசார்பற்ற அரசியலமைப்பைச் சிதைக்கும் வண்ணம் இத்திருத்த மசோதா உள்ளதெனச் சிலர் குறை கூறுகின்றனர்.

இதன்படி முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று இவர்கள் ஒருபுறம் கூற, இந்தியாவின் வட மாநிலங்களுக்கு வெளிநாட்டவர் வெள்ளமெனத் திரண்டு வர இத்திருத்த மசோதா வழிவகுக்கிறது என இன்னொரு சாரார் கூறுகின்றனர்.

குறிப்பாக இத்திருத்த மசோதாவுக்கு அசாமில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. அண்டை நாடான பங்ளாதேஷிலிருந்து கள்ளக் குடியேறிகள் வருவதற்கு எதிரான இயக்கம் கடந்த சில ஆண்டுகளாகவே இருந்து வர, இப்போது இந்தக் குடியுரிமை திருத்த மசோதா நிலைமையை மோசமாக்கியுள்ளது.

ஊரடங்கை மீறி ஆர்ப்பாட்டக்காரர்கள் மோடிக்கு எதிராக கோஷமிட்டவாறு தெருக்களில் இருந்த வாகனங்களையும் டயர்களையும் தீ வைத்துக் கொளுத்தினர். அத்துடன் சமூக ஊடகத் தளங்களில் பரவக்கூடிய தகவல்கள் சட்ட ஒழுங்கு நிலையை மேலும் சீர்குலைக்கலாம் என்று அஞ்சி இன்று இரவு ஏழு மணியிலிருந்து அங்கு இணைய வசதியைத் தடை செய்துள்ளது அரசு.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity