அமெரிக்கா சென்ற நித்தியானந்தா சீடர்கள்: வழக்கறிஞர் தகவல்

அகமதாபாத்: குஜராத் போலிசாரால் தேடப்பட்டு வரும் நித்தியானந்தாவின் பெண் சீடர்கள் இருவர் அமெரிக்காவில் இருப்பது தெரியவந்துள்ளது. குஜராத் உயர் நீதிமன்றத்தில் இருவரும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.

பெங்களூருவைச் சேர்ந்த ஜனார்த்தன சர்மா என்பவர் சுவாமி நித்தியானந்தாவின் குஜராத் ஆசிரமத்தில் தங்கி இருந்த தமது மகள்களைக் மீட்கக் கோரி அம்மாநில உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இதையடுத்து இரு பெண்களையும் குஜராத் போலிசார் தேடி வருகின்றனர். 

இந்நிலையில் நித்தியானந்தா வெளிநாட்டுக்குத் தப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது. ஈக்வடார் அருகே உள்ள தீவை விலைக்கு வாங்கி தமது ஆதரவாளர்களுடன் அங்கு தங்கியிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ஜனார்த்தன சர்மாவின் இரு மகள்கள் சார்பில் குஜராத் உயர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தங்கள் தந்தையுடன் செல்வதில் விருப்பமில்லை என்றும்,  தற்போது அமெரிக்காவின் வெர்ஜினியா பகுதியில் இருப்பதாகவும் இருவரும் குறிப்பிட்டுள்ளனர்.

இருவர் சார்பாக நீதிமன்றத்தில் முன்னிலையான வழக்கறிஞர், மனுதாரர்களின் உயிருக்கு அவர்களது தந்தையால் ஆபத்து உள்ளது என்றார். 

இரு பெண்களையும் தம்மால் நேரடியாகத் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும், சமூக வலைத்தளம் மூலம் உரையாடிய பிறகே அவர்கள் அமெரிக்காவில் இருப்பது தெரியவந்தது என்றும் வழக்கறிஞர் தெரிவித்தார்.

“இரு பெண்களும் தங்கியுள்ள இடத்தின் முகவரி தெளிவாகத் தெரியவில்லை. எனினும் நீதிமன்றம் அனுமதித்தால் அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் இருந்து இருவரையும் காணொளி வசதி மூலம் நீதிமன்ற விசாரணைக்கு முன்னிலைப்படுத்த தயார்,” என்று அந்த வழக்கறிஞர் மேலும் கூறியுள்ளார்.

இதற்கிடையே பனாமா கால்வாய்க்கும் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்துக்கும் இடையே உள்ள சிறு தீவில் நித்தியானந்தா பதுங்கி இருக்கக்கூடும் என குஜராத் காவல்துறை கருதுவதாகக் கூறப்படுகிறது.