புதுடெல்லி: பாலியல் குற்றங்கள் தொடர்பில் மத்திய அரசை விமர்சித்து தாம் தெரிவித்த கருத்துகளை எக்காரணம் கொண்டும் திரும்பப் பெறப்போவதில்லை என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ராகுல் காந்தி மன்னிப்புக் கோரவேண்டும் என பாஜக மீண்டும் வலியுறுத்தி உள்ளது. அண்மையில் ஜார்க்கண்ட் மாநிலத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய ராகுல் காந்தி, “பிரதமர் மோடி ‘இந்தியாவில் தயாரிப்போம்’ (மேக் இன் இந்தியா) என முழங்கும் நிலையில் ‘ரேப் இன் இந்தியா’ (இந்தியாவில் பாலியல் பலாத்காரம் செய்வோம்) என்பதுதான் நாட்டின் அடையாளமாக உள்ளது,” என்று குறிப்பிட்டார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ராகுல் காந்தி பெண்களை அவமானப்படுத்த விட்டதாக பாஜக பெண் எம்.பி.க்கள் சாடியுள்ளனர்.
இதற்காக மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்திய நிலையில், அதற்கு வாய்ப்பே இல்லை என ராகுல் திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.
இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ராகுல், உண்மையைப் பேசியதற்காகத் தாம் மன்னிப்புக் கேட்கவேண்டிய அவசியம் இல்லை என்றார். இந்தியப் பொருளாதாரத்தை அழித்துக் கொண்டிருப்பதற்காக மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும்தான் மன்னிப்புக் கேட்கவேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
“என் பெயர் வீர சாவர்க்கர் அல்ல. எனது பெயர் ராகுல் காந்தி. நான் மன்னிப்புக் கேட்கமாட்டேன். உண்மையைச் சொன்னதற்காக நான் மட்டுமல்ல, எந்தக் காங்கிரஸ் தொண்டரும் மன்னிப்புக் கேட்க மாட்டார்,” என ராகுல் தெரிவித்தார்.
இந்நிலையில் ராகுல் மன்னிப்புக் கேட்டாலும் நாட்டு மக்கள் அவரை மன்னிக்க மாட்டார்கள் என பாஜக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், பல விஷயங்களில் பாகிஸ்தானைப் போன்ற மொழியில் பேசும் காங்கிரஸ் கட்சியினரையும் நாடு மன்னிக்காது என்றார்.