ரயில் நிலையத்தில் தனக்குத் தானே பிரசவம் பார்த்துக்கொண்ட இளம்பெண்

ரயில் நிலையத்தில் தனக்குத் தானே பிரசவம் பார்த்துக்கொண்ட இளம்பெண்

1 mins read
8adfc4d0-ba9f-400b-937f-e9e502b3b5af
பிறந்த பெண் குழந்தையின் அழுகுரல் கேட்டு தூக்கத்தில் இருந்து கண்விழித்தார் ரம்யாவின் கணவர் வெங்கடேஷ். குழந்தை, பெற்றோருடன் அதிகாரிகள். படம்: இந்திய ஊடகம் -

ரயில் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் தனக்குத் தானே பிரசவம் பார்த்துக் கொண்டது எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

ஆந்திராவின் ரேணிகுண்டா பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். பணி நிமித்தமாக அண்மையில் சென்னை வந்த அவர், நிறைமாத கர்ப்பிணியான தனது 25 வயது மனைவி ரம்யாவையும் உடன் அழைத்து வந்துள்ளார்.

சென்னையில் பணியை முடித்த பிறகு மனைவியுடன் கடந்த 13ஆம் தேதி ஊர் திரும்ப திட்டமிட்டிருந்தார் வெங்கடேஷ். அன்றைய இரவு கணவனும் மனைவியும் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் நடைமேடையிலேயே படுத்துத் தூங்கிவிட்டனர்.

இந்நிலையில் அதிகாலை 3 மணி அளவில் திடீரென ரம்யாவுக்குப் பிரசவ வலி ஏற்பட்டது. கணவர் வெங்கடேஷ் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததால் அவரை எழுப்பத் தயங்கியுள்ளார் ரம்யா. இதையடுத்து அவர், தனக்குத் தானே பிரசவம் பார்த்துக் கொண்டார். மேலும் குழந்தையின் தொப்புள் கொடியையும் அவரே அறுத்துள்ளார்.

இந்நிலையில் பிறந்த பெண் குழந்தையின் அழுகுரல் கேட்டு தூக்கத்தில் இருந்து கண்விழித்தார் வெங்கடேஷ். அதற்குள் பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டு ரயில் நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களும் விரைந்து வந்தனர்.

இதையடுத்து ரம்யாவுக்கும் குழந்தைக்கும் ரயில் நிலையத்தின் அவசர சிகிச்சை மையத்தில் முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் சென்னையில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

குறிப்புச் சொற்கள்
சென்னைரயில் நிலையம்