புதுடெல்லி: உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாஜக முன்னாள் எம்எல்ஏ குல்தீப் சிங் சேங்கர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
எனினும் அவருக்குரிய தண்டனை எதிர்வரும் 19ஆம் தேதி தான் அறிவிக்கப்பட உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏவான பாஜகவின் குல்தீப் சிங் சேங்கர் வீட்டில் வேலை பார்க்கச் சென்றிருந்தார் 19 வயது இளம்பெண்.
இந்நிலையில் எம்எல்ஏ தன்னைப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக அவர் புகார் எழுப்பினார். இச்சம்பவம் கடந்த 2017ஆம் ஆண்டு நிகழ்ந்தது.
எம்எல்ஏ மீது அவர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, அடுத்த நாளே சட்ட விரோதமாக ஆயுதம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் போலிசார் அப்பெண்ணின் தந்தையைக் கைது செய்தனர்.
இதைக் கண்டித்து அந்த இளம்பெண் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டின் முன்பு தீக்குளிக்க முயன்றார். ஆனால் பலன் எதுமில்லாத நிலையில் போலிஸ் காவலில் இருந்த அவரது தந்தை இறந்து போனார்.
இது தொடர்பாக எம்எல்ஏ குல்தீப் சிங் சேங்கரின் தம்பி மீது குற்றம் சாட்டப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை புகாரின் பேரில் எம்எல்ஏவும் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் அடுத்த திடுக்கிடும் திருப்பமாக, பாதிக்கப்பட்ட இளம்பெண் சென்ற கார் மீது லாரி ஒன்று மோதியது. இந்த விபத்தில் அந்தப் பெண்ணும் அவரது வழக்கறிஞரும் படுகாயம் அடைந்தனர். எனினும் அப்பெண்ணின் உறவினர்கள் இருவர் உயிரிழந்தனர்.
உத்தரபிரதேச போலிசார் தொடக்கத்தில் இதை விபத்து என்று தெரிவித்திருந்த நிலையில், பின்னர் எம்எல்ஏ மீது கொலை வழக்குப் பதிவு செய்தது.
இத்தகைய பரபரப்புகளை அடுத்து. குல்தீப் சிங்கை கட்சியிலிருந்து நீக்குவதாக பாஜக தலைமை அறிவித்தது. தற்போது பாலியல் வன்கொடுமை வழக்கில் அவர் தண்டனையை எதிர்நோக்கியுள்ளார்.