நித்தியானந்தா: கைலாசா நாட்டில் குடியேற 40 லட்சம் பேர் ஆசை

நித்தியானந்தா: கைலாசா நாட்டில் குடியேற 40 லட்சம் பேர் ஆசை

1 mins read

புதுடெல்லி: கைலாசாவுக்கு குடியுரிமை கேட்டு சுமார் 40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக நித்தியானந்தா தமது புதிய காணொளிப் பதிவில் தெரிவித்துள்ளார்.

சர்ச்சைகளுக்குப் பெயர் பெற்ற சாமியார் நித்தியானந்தா மீது கடந்த சில நாட்களாக புதிது புதிதாக ஏராளமான புகார்கள் கூறப்படுகின்றன.

குழந்தை கடத்தல் வழக்கு, பாலியல் வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் நித்தியானந்தா மீது தொடுக்கப்பட்டுள்ள நிலையில் திடீரென அவர் தலைமறைவானார். மேலும் ஆண் சீடர்களுக்கும் நித்தியானந்தா பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாகவும் தற்போது புகார் எழுந்துள்ளது.

இதனிடையே இன்று 18ஆம் தேதிக்குள் நித்தியானந்தாவைக் கண்டுபிடிக்க பெங்களூர் நீதிமன்றம் கர்நாடகா காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் நித்தியானந்தா வெளியிட்ட காணொளி பதிவில், கைலாசாவில் குடியுரிமை கோரி 40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாகக் கூறியுள்ளார். மேலும் 'கைலாசா நாட்டை நான் அமைத்தே தீருவேன்' என அவர் உறுதியுடன் குறிப்பிட்டுள்ளார்.

"கைலாசா நாடு அமைக்கும் திட்டத்தால் எனக்கு அடிதான் விழும் என்று நினைத்தேன். ஆனால் அதற்கு மாறாக ஆதரவு பெருகி வருகிறது," என்று நித்தியானந்தா தெரிவித்திருக்கிறார்.