உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டம் நஜிபாபாத் பகுதியை சேர்ந்தவர் ஹாஜி எஹ்சான்.
ஆறு மாதங்களுக்கு முன்பு நிலத்தரகரான அவரையும், அவரது மருமகனையும் ஒரு தகராறில் ஷாநவாஸ் என்பவர் ஜப்பார் என்பவருடன் சேர்ந்து கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
ஷாநவாஸ், ஜப்பார் ஆகியோரை கைது செய்து போலிசார் வழக்கு பதிவு செய்தனர். இருவரும் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையே, எஹ்சானின் மகன் தம் தந்தையைக் கொன்றவர்களைப் பழிவாங்கத் திட்டமிட்டார்.
வழக்கு விசாரணைக்காக ஷாநவாஸ், ஜப்பார் ஆகிய இருவரையும் திகார் சிறையில் இருந்து பிஜ்னோரில் உள்ள தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு அழைத்துவந்தனர்.
இதை அறிந்த எஹ்சானின் மகன் உட்பட மூவர் துப்பாக்கிகளுடன் நீதிமன்றத்துக்கு வந்தனர்.
நீதிமன்ற அறையில் நீதிபதிகளின் கண் முன்பாகவே ஷாநவாஸ், ஜப்பார் ஆகிய இருவரையும் அவர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.
அவர்களைக் காப்பாற்ற போலிசார் பாய்ந்து சென்றனர். ஆயினும், ஷாநவாஸ் அந்த இடத்திலேயே குண்டு பாய்ந்து இறந்தார். மற்றொரு குற்றவாளியான ஜப்பார் மற்றும் இரண்டு போலிசாருக்கு காயம் ஏற்பட்டது.
துப்பாக்கிச்சூடு நடத்திய மூவரும் தப்பியோட முயன்றனர். ஆனால், நீதிமன்ற வளாகத்துக்குள்ளாகவே அவர்களை போலிசார் பிடித்து கைது செய்தனர்.
காயமடைந்த மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் மாஜிஸ்திரேட் யோகேஷ் குமார் காயங்களின்றி தப்பினார்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity