புதுடெல்லி: தோற்றுவிடுவோம் என்ற அச்சம் காரணமாக எதிர்க்கட்சியினர் கலவரத்தைப் பரப்பி வருவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
விரைவில் நடைபெற உள்ள டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி பெரும் வெற்றியை ஈட்டும் என அவர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
கலவரத்தை தூண்டி விடக்கூடிய ஆற்றல் யாருக்கு உண்டு என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள் என்றும் கடந்த காலங்களில் தேர்தல் சமயத்தில் என்ன நடந்தது என்பதை மக்கள் கண்கூடாகப் பார்த்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பாஜகவை மறைமுகமாகக் குறிப்பிட்டே கெஜ்ரிவால் இவ்வாறு கூறியிருப்பதாகக் கருதப்படுகிறது.
வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் 3 முதல் 4 கோடி எண்ணிக்கையிலான முஸ்லிம் அல்லாதவர்கள் இருப்பதாக பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ள கெஜ்ரிவால், அவர்களில் பாதி பேர் இந்தியாவுக்கு வந்தால் யார் வேலைவாய்ப்புகள் கொடுக்க முடியும். அவர்களுக்கு டெல்லி, குஜராத், அசாம், திரிபுராவில் வீடுகள் வழங்கப்படுமா என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
“கலவரத்தைத் தூண்டக் கூடிய சக்திகளை டெல்லி மக்கள் முறியடிக்க வேண்டும். இதன்வழி அமைதியை நிலைநிறுத்த வேண்டும்,” என்று அரவிந்த் கெஜ்ரிவால் மேலும் தெரிவித்துள்ளார்.
எந்தவொரு கட்சியின் பெயரையும் அவர் நேரடியாகக் குறிப்பிடவில்லை. எனினும் அவர் பாஜகவைதான் சுட்டிக்காட்டுவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
இதற்கிடையே டெல்லியில் பாஜகவினர்தான் கலவரத்தைப் பரப்புவதாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில், ராஞ்சியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா காந்தி மாணவர்களின் குரலைக் கேட்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அசாமில் கொண்டு வரப்பட்ட தேசியக் குடியுரிமைப் பதிவேடு தோல்வி கண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“அசாமில் சந்தித்த தோல்வி காரணமாகவே புதிதாகத் திருத்தி அமைக்கப்பட்ட குடியுரிமைச் சட்டத்தை பாஜக கொண்டு வந்துள்ளது. இதுதான் மாணவர்களின் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
“நாடு முழுவதும் சாலையில் இறங்கிப் போராடும் மாணவர்கள் மீது போலிசார் தடியடி நடத்துகின்றனர். எனவே, மாணவர்களின் குரலைக் கேட்கும் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யும், பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்,” என்றார் பிரியங்கா காந்தி.