ஜெய்ப்பூர்: 4 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆட்படுத்திய குற்றவாளிக்கு 17 நாட்களில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானைச் சேர்ந்தவர் தயாராம் மேக்வால். 21 வயதான இவர் கடந்த நவம்பர் 30ஆம் தேதி 4 வயதே ஆன சிறுமியைச் சீரழித்துள்ளார்.
இதுகுறித்துத் தகவல் அறிந்த போலிசார் துரிதகதியில் விசாரணை மேற்கொண்டு தயாராமை மறுதினமே கைது செய்தனர். பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவானது.
டிசம்பர் 7ஆம் தேதி போலிசார் சுரு மாவட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம் தயாராமுக்கு ஆயுள் தண்டனை விதிப்பதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
இதன்மூலம் குற்றம் புரிந்த 17 நாட்களில் குற்றவாளிக்குத் தண்டனை கிடைத்துள்ளது.
“போலிஸ் உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொண்டதால் இந்த வழக்கு மிக விரைவில் முடிவுக்கு வந்துள்ளது. அறிவியல் பூர்வ ஆதாரங்களும், பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த வாக்குமூலமும் வழக்கு விசாரணையில் முக்கியப் பங்கு வகித்தன.
“மேலும் நீதிமன்றமும் நாள்தோறும் இந்த வழக்கு விசாரணையை நடத்தியது,” என்று மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் எஸ். தேஜஸ்வனி கௌதம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை விதிக்க வேண்டும், குற்றவாளிகள் விரைவாக தண்டிக்கப்பட வேண்டும் என நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.