புதுடெல்லி: உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட குல்தீப் சிங் செங்காருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவருக்கு ரூ.25 லட்சம் அபராதமும் விதித்து டெல்லி நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவ் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், பாஜக எம்எல்ஏவாக இருந்த குல்தீப் சிங் கடந்த 2017ஆம் ஆண்டு தன்னை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆட்படுத்தியதாகப் புகார் தெரிவித்தார்.
இதையடுத்து அவரது தந்தை கள்ளத்துப்பாக்கி வைத்திருந்ததாக கைதானார். பின்னர் அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டது.
பாதிக்கப்பட்ட பெண் காரில் சென்றபோது லாரி மோதியது. படுகாயங்களுடன் அவர் உயிர் பிழைத்தார்.
இப்படி அடுத்தடுத்து பல அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நடந்தேறிய நிலையில், பாஜகவில் இருந்து குல்தீப் சிங் செங்கார் நீக்கப்பட்டார். அவர் மீது கொலை வழக்கும் பதிவானது.
இதையடுத்து அவர் சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணை டெல்லி குற்றவியல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. விசாரணையின் முடிவில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 25 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.
அபராதத் தொகையில் 10 லட்சம் ரூபாயை பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு அளிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த பாலியல் வன்கொடுமை வழக்கு தவிர குல்தீ்ப் சிங் மீதான மேலும் 4 வழக்குகளின் விசாரணை முடிவடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.