அமராவதி: கல்கி பகவான் என்று அழைக்கப்பட்டு வந்த விஜயகுமார் பினாமி பெயரில் கோடிக்கணக்கில் சொத்துகள் குவித்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.
இதையடுத்து அச்சொத்துக்களை முடக்க வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது கல்கி ஆசிரமம். கல்கி விஜயகுமார் இதை நிர்வகித்து வருகிறார்.
தனக்குப் பல்வேறு வகையிலும் கிடைத்த ஏராளமான நன்கொடைகளைக் கொண்டு அவர் அந்த ஆசிமரத்தை நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கல்கி ஆசிரமத்தில் கடந்த அக்டோபர் மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ரூ.800 கோடி வருவாயைக் கணக்கில் காட்டாமல் வரி ஏய்ப்புச் செய்தது அம்பலமானது.
மேலும் கல்கி ஆசிரமத்துடன் தொடர்புடைய பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையின்போது 44 கோடி ரூபாய் ரொக்கப் பணமும், 20 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டுப் பணமும் சிக்கின.
தவிர, 88 கிலோ தங்க நகைகள், ரூபாய் 5 கோடி மதிப்புள்ள வைரங்கள், சில முக்கிய ஆவணங்கள் ஆகியவற்றையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இவை போக தென்னிந்தியாவில் பல்வேறு இடங்களில் சுமார் 900 ஏக்கர் அளவிலான நிலத்தை கல்கி விஜயகுமார் வாங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சொத்துகளில் பெரும்பாலானவை அவரது பினாமிகளின் பெயரில் வாங்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை முடக்குவதற்குரிய நடவடிக்கைகளை வருமான வரித்துறை மேற்கொண்டுள்ளது என்றும் தமிழக ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
வருமான வரித்துறையின் நட வடிக்கையால் கல்கி விஜயகுமார் கடும் நெருக்கடியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.