புதுடெல்லி: உலகில் ரூ. 350 லட்சம் கோடி (US$5 டிரிலியன்) மதிப்புள்ள பொருளியலைக் கொண்ட நாடாக இந்தியா திகழ வேண்டும் என்று பாஜக அரசாங்கம் நிர்ணயித்து இருக்கும் இலக்கு கானல் நீர் அல்ல என்றும் அந்த இலக்கு எட்டக்கூடிய ஒன்றுதான் என்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து இருக்கிறார்.
இந்திய வர்த்தக தொழில் சபையின் ஆண்டுக் கூட்டம் புதுடெல்லியில் நடந்தது. அதில் பேசிய பிரதமர், இந்தியப் பொருளியலை முன்னெடுத்துச்செல்ல பாஜக அரசு பாடுபட்டு வருவதாகக் கூறினார்.
ரூ.350 லட்சம் கோடி இலக்கை எட்டுவதற்குத் தேவையான அடித்தளத்தை தாங்கள் வலுவாக அமைத்து இருப்பதாகவும் எளிதாக தொழில் தொடங்கும் நாடுகள் பட்டியலில் இந்தியாவின் இடம் தொடர்ந்து மேம்பட்டு வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
அழிவுப் பாதையில் சென்று கொண்டிருந்த பொருளியலை வளர்ச்சிப் பாதையில் பாஜக அரசு திருப்பி இருப்பதாகக் கூறிய திரு மோடி, உலகளாவிய நிலையில் போட்டியை எதிர்கொள்ள தரத்தை உயர்த்த கடுமையாகப் போராடி வருவதாகவும் குறிப்பிட்டார்.
இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடியின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் பயங்கரவாதிகள் களமிறங்கி இருப்பதாக வேவுத்துறை எச்சரித்ததை அடுத்து பிரதமருக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
புதுடெல்லியில் அடுத்த சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருப்பதையொட்டி நேற்று பாஜக தேர்தல் பிரசாரத்தைப் பிரதமர் மோடி தொடங்கவிருந்தார். அவர் ராம்லீலா மைதானத்தில் பெரும் கூட்டத்தில் உரையாற்றவிருந்தார். அந்தச் சூழலில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது.