சென்னை: இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவது குறித்து மத்திய அரசாங்கம் பரிசீலனை செய்வதாக தமிழ்நாட்டின் ஆளும் கட்சி தெரிவித்து இருக்கிறது.
இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என்பது அதிமுகவின் நெடுநாள் கொள்கை என்றும் அண்மையில் புதுடெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தபோது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவரிடம் இதை வலியுறுத்தியதாகவும் அதிமுகவின் ‘நமது அம்மா’ நாளிதழ் உறுதிபட தெரிவித்து உள்ளது.
அதிமுகவின் அந்தக் கோரிக்கை தொடர்பில் உரிய நேரத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் என்று உள்துறை அமைச்சர், தமிழக முதல்வரிடம் உறுதி தெரிவித்து இருக்கிறார் என்றும் அந்த நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும் அதிமுகவின் இரும்புத் தலைவியுமான ஜெயலலிதா இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்று ஏற்கெனவே வலியுறுத்தி இருந்ததை உள்துறை அமைச்சரிடம் முதல்வர் பழனிசாமி எடுத்துக் கூறியதாகவும் அதிமுக நாளேடு சுட்டிக்காட்டியது.
மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக புதுடெல்லி சென்ற முதல்வர் பழனிசாமி, கடந்த வியாழக்கிழமை தலைநகரில் நடந்த இரண்டாவது தேசிய குழுவின் கூட்டத்திலும் கலந்துகொண்டார்.
பிறகு அவர் பிரதமர் நரேந்திர மோடியையும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும், நிதித்துறை அமைச்சரையும் தமிழக அமைச்சர்களுடன் சந்தித்துப் பேசினார்.
மத்திய பாஜக அரசு குடியுரிமைத் திருத்த சட்டத்தை அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. அந்தச் சட்டம் இஸ்லாமியர்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் எதிராக இருக்கிறது என்று கூறி எதிர்க்கட்சிகள் பெரிய அளவில் போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்நிலையில் இலங்கைத் தமிழருக்கு இரட்டைக் குடியுரிமைப் பற்றிய தகவலை அதிமுக வெளியிட்டு உள்ளது.