பெங்களூர்: சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான நஞ்சுண்டன் பெங்களூருவில் மரணம் அடைந்தார்.
மாரடைப்பு மற்றும் மூளை நரம்புகள் வெடித்ததில் நஞ்சுண்டன் உயிரிழந்திருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 2012ம் ஆண்டு ‘அக்கா’ என்ற கன்னட இலக்கிய மொழிபெயர்ப்பு நூலுக்காக அவர் சாகித்ய அகாடமி விருது பெற்றார். இவர் 30 ஆண்டுகளாக பெங்களூர் பல்கலைக்கழகத்தில் புள்ளியியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி வந்தார். பல்கலைக்கழகத்தை ஒட்டியுள்ள ஞானபாரதி பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் தனியாக வசித்தார். புள்ளியியல் துறையில் திறம்படச் செயல்பட்ட நஞ்சுண்டன் 10க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும், ஏராளமான கருத்தரங்க உரைகளையும் நிகழ்த்தியுள்ளார்.