லக்னோ: உத்தரப்பிரதேசத்தின் ஃபரிதாபாத் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் நடந்து கொண்டிருந்தது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்தார் போலிஸ் விஜேந்திர குமார்.
யாரும் எதிர்பாராத வேளையில் துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டது. அதிலிருந்து வந்த தோட்டா விஜேந்திர குமாரின் மீது பாய்ந்தது. ஆனால் அவருக்கு எதுவும் ஆகவில்லை. குண்டு துளைக்காத உடை அணிந்திருந்ததால்தான் உயிர் தப்பியதாக நிம்மதி அடைந்தார் காவலர்.
இந்த சம்பவம் நடந்து சில மணிநேரம் ஆன நிலையில் ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்காக தனது பர்சை எடுத்த விஜேந்திர குமார் அதிர்ச்சியடைந்தார். காரணம் அவரின் பர்சை கிழித்துக்கொண்டு ஒரு குண்டு எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது.
விஜேந்திரர் மீது பாய்ந்த தோட்டா அவர் உடுத்தியிருந்த குண்டு துளைக்காத உடைக்குள் ஊடுருவி, அவர் அணிந்திருந்த ஜாக்கெட்டுக்குள் புகுந்து அதன் முன்பக்கத்தில் இருந்த பணப்பையைத் துளைத்துள்ளது.
பாக்கெட்டில் பணப்பை வைத்திருந்ததால் மயிரிழையில் விஜேந்திர குமார் உயிர் தப்பினார். பணப்பையில் நான்கு ஏடிஎம் கார்டுகளும் சாமி படங்களும் இருந்ததாகவும் தான் உயிர் தப்பியது தனக்கு மறுஜென்மம் என்றும் நெகிழ்ச்சியுடன் விஜய்குமார் தெரிவித்தார்.