புதுடெல்லி: டெல்லியின் கிராரி என்ற இடத்தில் உள்ள துணிக்கிடங்கு ஒன்றில் ஞாயிற்றுக்கிழமையன்று இரவு ஊழியர்கள் 20 பேர் உறங்கி கொண்டிருந்தனர்.
இந்நிலையில் நள்ளிரவு 1 மணி அளவில் கிடங்கில் தீ பற்றிக்கொண்டது. துணிக்கடை என்பதால் தீயானது வேகமாக பரவியது.
தகவல் அறிந்து 5 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த விபத்தில் உடல் கருகியும் மூச்சு திணறல் ஏற்பட்டும் கிடங்கு ஊழியர்கள் 9 பேர் உயிரிழந்தனர். அவர்களில் மூவர் குழந்தைகள். 11 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மின்கசிவு காரணமாக துணிக்கடையில் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபகாலமாக டெல்லியில் அடுத்தடுத்து தீ விபத்து சம்பவங்கள் நடைபெற்று வருவது அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
முன்னதாக, அனாஜ் மண்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் 43 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.