பொருளியல் மந்தநிலையில் இருந்து வெளிவர இந்தியா அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்துலகப் பண நிதியம் கேட்டுக்கொண்டுள்ளது.
உலக வளர்ச்சியின் உந்துசக்திகளில் ஒன்றான இந்தியப் பொருளியலின் மந்தநிலையைச் சரிசெய்ய விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு இந்திய அரசாங்கத்தை நிதியம் கேட்டுக்கொண்டுள்ளது.
மக்கள் செலவிடுவது, முதலீடு குறைந்து வருகிறது. வரி வருவாய் வீழ்ச்சியடைந்துள்ளது. இவற்றுடன் மற்ற காரணிகளும் இணைந்து உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளியல்களில் ஒன்றான இந்தியாவுக்குத் தடையை ஏற்படுத்தி உள்ளதாக அனைத்துலக பண நிதியம் தனது ஆண்டு மதிப்பாய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மில்லியன் கணக்கான மக்களை வறுமையிலிருந்து மீட்டுள்ள பின்னர், “இந்தியா தற்போது ஒரு குறிப்பிடத்தக்க பொருளாதார மந்தநிலையில் உள்ளது,” என்று அனைத்துலகப் பண நிதியத்தின் ஆசியா, பசிபிக் பிரிவைச் சேர்ந்த ரணில் சல்கடோ கூறினார்.
“தற்போதைய வீழ்ச்சியிலிருந்து மீள்வதற்கும் இந்தியாவை உயர் வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதற்கும் அவசர கொள்கை அமலாக்கங்கள் தேவை,” என்றார் அவர்.
எனினும், வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் செலவு செய்வதை அதிகரிப்பதற்கு அரசாங்கத்திடம் போதிய முகாந்திரங்கள் இல்லை. அதிலும் குறிப்பாக, அதிக கடன்களும் வட்டிகளும் உள்ள நிலையில் இதற்கான சாத்தியம் குறைவு என்று நிதியம் கூறியது.
இவ்வாண்டு மட்டும் இந்தியாவின் மத்திய வங்கி அதன் வட்டி விகித்தை ஐந்து முறை குறைத்துள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் ஆகக் குறைவான வட்டி விகிதம் பதிவானது.
அனைத்துலகப் பண நிதியம் அடுத்த மாதம் வெளியிடப்படவுள்ள உலக பொருளியல் முன்னோட்ட அறிக்கையில், இந்திய பொருளியலின் வளர்ச்சி மதிப்பீடுகளை கணிசமாக குறைக்கவுள்ளது என்று அனைத்துலகப் பண நிதியத்தின் தலைமை பொருளியலாளரான கீதா கோபிநாத் கூறினார்.
2019ஆம் ஆண்டிற்கான முன்னுரைப்பை 6.1 விழுக்காடாக அக்டோபரில் அனைத்துலகப் பண நிதியம் குறைத்தது. 2020க்கான கணிப்பையும் 7.0 விழுக்காடாக குறைத்தது.
இந்திய மத்திய வங்கிக்கு “வட்டி விகிதத்தை மேலும் குறைக்க இடமுண்டு, குறிப்பாக பொருளியல் மந்தநிலை தொடர்ந்தால்” என்று சல்கடோ கூறினார்.
பயனீட்டாளர் தேவையும் தயாரிப்புகளும் சுருங்கியதை அடுத்து, இந்திய மத்திய வங்கி ஆண்டு வளர்ச்சி முன்னுரைப்பை 6.1 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காடாகக் குறைத்தது.
இந்தியப் பொருளியல் கடந்த ஆறு ஆண்டுகளில், 2019 ஜூலை-செப்டம்பர் காலகட்டத்தில் மிக மெதுவான வேகத்தில் வளர்ந்தது. ஓராண்டுக்கு முன்பிருந்த 7.0 விழுக்காட்டிலிருந்து 4.5 விழுக்காடாகக் குறைந்துள்ளது என்று அரசாங்கப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
நிதித்துறையின் ஆரோக்கியத்தை மீட்டெடுப்பது உட்பட “சீர்திருத்தங்களுக்கு அரசாங்கம் புத்துயிர் அளிக்க வேண்டும்” என்று ரணில் சல்கடோ கூறினார்.