அசாமில் குடியுரிமையற்றவர்களுக்காக 10 தடுப்புக்காவல் முகாம்கள்

அசாமில் குடியுரிமையற்றவர்களுக்காக 10 தடுப்புக்காவல் முகாம்கள்

1 mins read

புதுடெல்லி: பங்ளாதேஷில் இருந்து இந்தியாவுக்குள் நுழைந்த சுமார் 20 லட்சம் பேர் அசாம் மாநிலத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இவ்வாறு சட்டவிரோதமாக அசாம் மாநிலத்துக்குள் ஊடுருவியுள்ளவர்களை அடையாளம் காணவே தேசிய குடிமக்கள் பதிவேடு வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவிக்கிறது.

பதிவேட்டில் விடுபட்டவர்கள் தங்கள் குடியுரிமையை நிரூபிக்க மேல்முறையீடு செய்யலாம் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

பிறப்புச் சான்றிதழ், பல ஆண்டுகளாக இந்தியாவில் தங்கியிருப்பதற்கான ஆவணங்களை அதற்கு ஆதாரமாக அளிக்கலாம். மேலும், அவர்கள் 120 நாட்களுக்குள் 'வெளிநாட்டினர் தீர்ப்பாயத்தில்' முறையிடலாம். இதில் தீர்வு கிடைக்காவிட்டால் அசாம் உயர் நீதிமன்றத்தில் முறையிடலாம்.

கடைசியாக, உச்ச நீதிமன்றத்திலும் முறையிடலாம் என்று அரசு கூறியுள்ளது. ஆனால், எல்லா நிலைகளிலும் குடியுரிமை கிடைக்கப் பெறாதவர்கள் நிலை என்ன என்பது குறித்து இன்னும் உறுதியாக அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களை அல்லது குடியுரிமை இல்லாதவர்களை தடுப்புக் காவலில் அடைத்து வைப்பதற்காக அசாம் மாநிலத்தில் மத்திய அரசு முகாம்களைக் கட்டிவருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அசாம் மாநிலம் முழுவதும் 10 இடங்களில் தடுப்புக்காவல் முகாம்கள் கட்டப்பட உள்ளதாகவும் அவற்றில் ஒன்று கோல்பாரா பகுதியில் கட்டப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த முகாம் கால்பந்தாட்ட மைதானத்தைப் போல ஏழு மடங்கு பெரிதாக உள்ளதாகவும் 3,000 பேர் வரை தங்கவைப்பதற்கான இடவசதி இங்கு உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.