ஹைதராபாத்: பெண் மருத்துவர் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு பின்பு காவல்துறையினரால் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட நான்கு பேரின் உடல்கள் மீண்டும் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
தெலுங்கானா மாநில உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி மறுபடியும் நடத்தப்பட்ட இந்த உடற்கூறு ஆய்வை டெல்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த நால்வர் அடங்கிய மருத்துவக் குழு செய்தது.
சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் உடல்களை அவர்களது குடும்பத்தினர் அடையாளம் காட்டிய பிறகு தொடங்கிய இந்த மறு உடற்கூறுஆய்வு சுமார் நான்கு மணி நேரம் நீடித்தது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி முழு மீண்டும் உடற்கூறு ஆய்வு ஒளிப்பதிவு செய்யப்பட்டது.
மீண்டும் உடற்கூறு ஆய்வு குறித்த அறிக்கை காணொளியுடன் இரு நாட்களில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நான்கு பேர் போலியான என்கவுண்டர் மூலம் சட்டத்துக்கு புறம்பாக சுட்டுக்கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் இதுதொடர்பாக மீண்டும் உடற்கூறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையிலேயே தெலுங்கானா உயர் நீதிமன்றம் மீண்டும் உடற்கூறு ஆய்வுக்கு உத்தரவிட்டிருந்தது. என்கவுண்டர் குறித்து மனித உரிமை ஆர்வலர்கள் பலர் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்ததும் நீதிமன்ற உத்தரவுக்கு ஒரு காரணம்.