புதுடெல்லி: மோடிக்கு ஆதரவாக வீசிய அலையால் 2014 மக்களவைத் தேர்தலில் வென்று பாஜக ஆட்சியில் அமர்ந்தது.
இரண்டாவது முறையும் அக்கட்சிக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியில் மீண்டும் பிரதமரானார் மோடி. இதனிடையில், கடந்த 2017ஆம் ஆண்டு பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 19 மாநிலங்களில் ஆட்சியில் இருந்தன. பின்னர் படிப்படியாக சரிவு ஏற்பட்டது.
முதலாவதாக, ஆந்திராவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி கூட்டணியில் தெலுங்கு தேசம் கட்சியுடனான உறவு முறிந்தது. அடுத்து இந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் ஆந்திரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் ஆட்சியை இழந்தது பாஜக. அண்மையில் நடைபெற்ற இரு மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல்களில் ஹரியானாவில் இருந்த தனிப் பெரும்பான்மை பலத்தை இழந்தது.
இதனால், சிறிய கட்சியான ஜனநாயக ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து ஹரியானாவில் தன் ஆட்சியைத் தக்கவைத்தது பாஜக. எனினும், முக்கிய மாநிலமான மகாராஷ்டிராவில் தனது பழம்பெரும் கூட்டணியான சிவசேனாவால் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க முடியாமல் போனது.
இதனிடையே, 2018ஆம் ஆண்டில் ஜம்மு-காஷ்மீரில் நிலவிய கூட்டணி ஆட்சியில் பிடிபி பாஜகவிடம் இருந்து விலகியது. இதன் காரணமாக, ஜம்மு-காஷ்மீரிலும் ஆட்சி கவிழ்ந்து ஆளும் வாய்ப்பை பாஜக இழந்தது.
இம்மாநிலத்தில் அதிபர் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதன் சிறப்பு அந்தஸ்து ஆகஸ்ட் 5ல் ரத்தானதுடன் அதில் இருந்து லடாக் தனியாகப் பிரிக்கப்பட்டு, யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவில் ஆட்சியை இழந்துவிட்டது பாஜக. இது கடந்த ஈராண்டுகளில் பாஜக இழந்த ஏழாவது மாநிலம் ஆகும்.
இந்த இறங்குமுக சூழலிலும் கர்நாடகா, மிசோராம், திரிபுரா, மேகாலயா மாநிலங்களை பாஜக புதிதாகக் கைப்பற்றியது.
இவற்றில் கர்நாடகா தவிர மற்ற மாநிலங்களில் பாஜகவிற்கு ஒருசில எம்எல்ஏக்கள் மட்டும் உள்ளனர். மார்ச் 2018
ஈராண்டுகளுக்கு முன்னர் நாட்டின் 72% மக்கள்தொகையின் ஆட்சியில் பாஜக பங்கு வகித்திருந்தது. அதில் தற்போது ஏழு மாநிலங்களை இழந்து 16 மாநிலங்களில் மட்டும் பாஜக ஆட்சி நீடிக்கிறது. இப்போதைய சூழ்நிலையில் 42 விழுக்காட்டு மக்களின் ஆதரவை மட்டுமே பாஜக பெற்றுள்ளது.
பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடன் பாஜக கூட்டணியில் உள்ளது. இங்கு அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.