புதுடெல்லி: என்பிஆர் எனப்படும் தேசிய மக்கள்தொகை பதிவேட்டை நாடு முழுவதும் விரிவுபடுத்தும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி ஒவ்வொரு குடிமகன் குறித்த முழுமையான விவரங்கள் சேகரிக்கப்பட்டு வகைப்படுத்தப்படும். இதற்கான கணக்கெடுப்பு வரும் ஏப்ரல் முதல் தேதியில் இருந்து துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் திட்டத்திற்கான செலவுத் தொகைக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
குறிப்பட்ட இடத்தில் 6 மாதங்கள் அல்லது அதற்கு அதிகமான காலம் வசிப்பவர்கள் இயல்பான குடிமகனாக கருதப்பட்டு பதிவேட்டில் இடம் பெறுவர். இதில் பதிவு செய்வது கட்டாயமாகும்.
தேசிய மக்கள்தொகை பதிவேட்டை அமல்படுத்தப்போவதில்லை என மேற்கு வங்கம், கேரளம், ஆந்திரா, பஞ்சாப் மாநிலங்கள் ஏற்கெனவே அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் எழுந்த கொந்தளிப்பு அடங்காமல் போராட்டம் நீடித்துவரும் நிலையில் அடுத்த அதிரடியை மத்திய அரசு தொடங்கி உள்ளது.