தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நிலத்தடி நீர் பெருக புதிய நீர்வளத் திட்டம்

2 mins read
c8f81359-61fc-4cfa-9b19-d47521949191
புதுடெல்லி: இந்தியாவில் நிலத்தடி நீர்வளம் மிகவும் குறைந்துவருவதாக வல்லுநர்கள் அபாயச் சங்கு ஊதிவரும் நிலையில், அங்கு ஏழு மாநிலங்களில் ரூ. 6,000 கோடி செலவிலான நீர்வளத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை தொடங்கிவைத்தார். கோப்புப்படம் -

புதுடெல்லி: இந்தியாவில் நிலத்தடி நீர்வளம் மிகவும் குறைந்துவருவதாக வல்லுநர்கள் அபாயச் சங்கு ஊதிவரும் நிலையில், அங்கு ஏழு மாநிலங்களில் ரூ. 6,000 கோடி செலவிலான நீர்வளத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை தொடங்கிவைத்தார்.

அந்தத் திட்டம் கர்நாடகா, ஹரியானா, மத்தியப்பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரம், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அத்திட்டம் அடுத்த 5 ஆண்டு களுக்கு நடப்பில் இருக்கும். திட்டத்தைத் தொடங்கி வைத்து பேசிய பிரதமர், இந்தத் திட்டத்துக்கான செலவில் பாதித்தொகை, உலக வங்கியிடமிருந்து கடனாகப் பெறப்படும் என்று குறிப்பிட்டார்.

மீதித்தொகை, வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படும்.

புதிய திட்டம் நடப்புக்கு வரும் ஏழு மாநிலங்களில் இருக்கும் 78 மாவட்டங்களில் உள்ள 8,350 கிராம பஞ்சாயத்துகள் அத்திட்டத்தால் பலன் அடையும் என்று திரு மோடி குறிப்பிட்டார்.

நிலத்தடி நீர் குறைவது, குடும்பப் பிரச்சினையோ தனிப்பட்ட பிரச்சினையோ அல்ல என்று தெரிவித்த பிரதமர், அது ஒட்டுமொத்த நாட்டையும் பாதிக்கும் பிரச்சினை என்று தெரிவித்தார்.

இப்போதைய நிலையில், 18 கோடி கிராமப்புற குடும்பங்களில் 3 கோடி குடும்பங்களுக்குத்தான் சுத்தமான குடிநீர் குழாய் மூலம் விநியோகிக்கப்படுகிறது என்ற திரு மோடி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் மீதி உள்ள 15 கோடி கிராமப்புற குடும்பங்களுக்கும் குழாய் மூலம் குடிநீர் விநியோகிக்க இத்திட்டம் உதவும் என்றார்.

2024ஆம் ஆண்டுக்குள் எல்லா குடும்பங்களுக்கும் குடிநீர் வழங்கு வதே இத்திட்டத்தின் நோக்கம்.