உலகையே அதிசயிக்க வைத்த அபூர்வ 'நெருப்பு வளைய' சூரிய கிரகணத்தின்போது, உடற்குறையுள்ள சிறுவர்கள் சிலர் கழுத்துவரை மண்ணில் புதைக்கப்பட்ட விநோத சம்பவம் இந்தியாவின் கர்நாடக மாநிலம், கல்புர்கி மாவட்டத்தில் நேற்று நிகழ்ந்தது.
அபூர்வ வானியல் நிகழ்வான நெருப்பு வளைய சூரிய கிரகணம், உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் தெரிந்தது. இந்தியாவிலும் பல்வேறு இடங்களில் முழுமையாகத் தெரிந்த இந்த நிகழ்வை ஒரு சில இடங்களில் மேகமூட்டத்தின் காரணமாக பார்க்க முடியவில்லை.
பொதுவாகவே கிரகணத்தின்போது உணவு சாப்பிடக்கூடாது, வெளியில் பயணம் செய்யக்கூடாது, கர்ப்பிணிகளுக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்றெல்லாம் தகவல்கள் பரவுவது வழக்கம். பலரும் இதனை நம்பி சூரிய கிரகணத்துக்கு முன்பாகவே காலை உணவை உட்கொண்டனர்.
ஆனால் இதையும் தாண்டி, மூடநம்பிக்கையின் பிரதிபலிப்பாக உடற்குறையுள்ள சிறுவர்கள் சிலர் கழுத்துவரை மண்ணில் புதைக்கப்பட்ட சம்பவம் கல்புர்கியில் நிகழ்ந்தது.
கல்புர்கியில் உள்ள தாஜ்சுல்தான்புர் என்னும் இடத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. கிரகணம் நிகழ்ந்த சமயத்தில் கழுத்துவரை மண்ணில் புதைக்கப்பட்ட உடற்குறையுள்ள சிறுவர்களில் பலர் 10 வயதுக்குட்பட்டவர்கள். இவ்வாறு செய்வதால் சிறுவர்களுக்கு தோல் நோய் ஏற்படாது என்றும் கூடிய விரைவில் உடற்குறைப் பிரச்சினை குணமடையும் என்றும் பலரிடையே நமபிக்கை நிலவுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இதுதொடர்பான காட்சிகள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அத்துடன், இந்த விநோத சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.