இந்தியக் குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை எதிர்த்து இந்தியாவெங்கும் பல இடங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.
இம்மாதம் 11ஆம் தேதியன்று இந்த சர்ச்சைக்குரிய சட்டத்திருத்தம் அமலாக்கப்பட்டபோது நாடெங்கும் போராட்டங்கள் வெடித்தன. அவற்றில் இதுவரை குறைந்தது 25 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், போராட்டங்கள் மோசமடையக்கூடும் எனக் கருதிய உத்தரப் பிரேதச அரசாங்கம் பாதுகாப்புப் பணிகளை நேற்று முடுக்கிவிட்டது. உத்தரப் பிரதேசத்தின் 75 மாவட்டங்களில் 21 மாவட்டங்களில் இணையச் சேவை முடக்கப்பட்டது.
பொய்ச் செய்திகள் பரவாமல் இருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
கோரக்பூர் போன்ற வன்முறை வெடிக்கக்கூடிய இடங்களில் போலிசார் விழிப்புநிலையில் உள்ளனர். அங்கு அமைதி விரும்பி அமைப்புகளுடன் போலிசார் கூட்டங்களை நடத்தினர். நிலைமையைக் கண்காணிக்க துணை ராணுவப் படையினரும் நிறுத்தப்படுவர் என்று மாவட்ட நீதிபதி விஜேந்திர பாண்டியன் தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாது, கேமராக்கள் பொருத்தப்பட்ட ஆளில்லா வானூர்திகளையும் போலிசார் பயன்படுத்துவர் என்று அவர் கூறினார்.
உத்தரப் பிரதேசத்தில் இம்மாதம் 19ஆம் தேதியிலிருந்து 21ஆம் தேதி வரை நிகழ்ந்த போராட்டங்களில் ஏறத்தாழ 21 பேர் உயிரிழந்தனர்.
மாண்டவர்களின் உடல்களில் துப்பாக்கிச் சூடு காயங்கள் காணப்பட்டபோதிலும் அவர்களைச் சுட்டுக் கொல்லவில்லை என்று உத்தரப் பிரதேச போலிசார் தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி பிளாஸ்டிக், ரப்பர் தோட்டாக்களை மட்டும் சுட்டதாக அவர்கள் கூறினர்.
பிஜ்னூரில் மட்டும் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அவர்கள் ஒப்புக்கொண்டனர். அதில் 20 வயது இளைஞர் ஒருவர் மாண்டார்.
துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்த போலிசார் சில புகைப்படங்களையும் காணொளிகளையும் வெளியிட்டனர். போராட்டங்களின்போது போலிசாரை நோக்கி ஆடவர்கள் இருவர் துப்பாக்கியால் சுட்டதை அவற்றில் காண முடிந்தது.
போராட்டங்கள் காரணமாக போலிசாருக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உத்தரப் பிரதேசத் துணை முதல்வர் தினேஷ் சர்மா கூறினார்.
“உத்தரப் பிரதேசத்தின் 21 மாவட்டங்களில் வெடித்த வன்முறையின் காரணமாக ஏறத்தாழ 288 போலிஸ் அதிகாரிகள் காயமுற்றனர். அவர்களில் 62 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டனர்,” என்று செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
டெல்லியில் உள்ள ஜாமியா பள்ளிவாசலுக்கு வெளியே நேற்று வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு இந்தியக் குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை எதிர்த்து பலர் போராட்டம் நடத்தினர்.
இதற்கிடையே, இந்தியக் குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை எதிர்த்து கொச்சியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கெடுத்ததற்காக நார்வேயைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் இந்திய குடிநுழைவு அதிகாரிகள் நேற்று முன்தினம் விசாரணை நடத்தினர்.
அதனை அடுத்து, அவர் இந்தியாவைவிட்டு வெளியேற வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.
அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அதிகாரிகள் நேரில் சென்றனர். ஹோட்டலிலிருந்து கிளம்பி விமான நிலையத்திற்குச் சென்று உடனடியாக இந்தியாவைவிட்டு வெளியேறுமாறு அவர்கள் அந்தப் பெண்ணுக்கு உத்தரவிட்டனர்.