மும்பை: இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் வங்கி மோசடியின் அளவு இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.1.13 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இதனை இந்திய ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளது.
4,412 மோசடி சம்பவங்கள் ஒரு லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட தொகையோடு சம்பந்தப்பட்டவை என அறிக்கை குறிப்பிடுகிறது.
இதற்கு முந்திய 2018-19ஆம் நிதியாண்டு முழுமைக்கும் 6,801 மோசடிகள் மூலம் ரூ.71,543 கோடி மோசடி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால், இந்த நிதியாண்டின் முதல்பாதியிலேயே மோசடியின் அளவு ஒரு லட்சம் கோடி ரூபாயைத் தாண்டிவிட்டது.
ரிசர்வ் வங்கி நிதி நிலைத்தன்மை தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “கடந்த நிதியாண்டில் நடந்த வங்கி மோசடிகள் குறித்தும் நடப்பு நிதியாண்டின் முதல்பாதியில் நடந்த வங்கி மோசடி குறித்தும் கண்டுபிடிக்கப்பட்டது.
“2019-20ஆம் நிதி ஆண்டில் 398 வங்கி மோசடிகள் நடந்துள்ளன. இதில் அனைத்துமே ரூ.50 கோடிக்கும் மேற்பட்டவை. இதன் மதிப்பு ரூ.1.05 லட்சம் கோடி.
“ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பில் 21 வங்கி மோசடிகள் நடந்துள்ளன. இவற்றின் மதிப்பு ரூ.44,951 கோடி. கடன் வழங்குவதால் ஏற்படும் மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
“கடந்த நிதியாண்டில் 90 விழுக்காட்டு வங்கி மோசடிகளும் நடப்பு நிதியாண்டில் 97 விழுக்காட்டு மோசடிகளும் கடன் மோசடியால் ஏற்பட்டவை.
“கடன் வழங்கும்போது பின்பற்றப்படவேண்டிய விதிமுறைகள் தெளிவாக வகுக்கப்பட்டு உள்ளன. அவற்றை முறையாகப் பின்பற்றாதது, கடன் திரும்பப்பெறும் முறையை உறுதியாகப் பின்பற்றாதது போன்றவைதான் வங்கி மோசடிகள் ஏற்படக் காரணமாக இருக்கின்றன.
“கூட்டுறவு வங்கிகள், வங்கி சாராத நிதி நிறுவனங்களில் நடக்கும் முறைகேடுகளைத் தடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன,” என அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.