ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மீது சிபிஐ விசாரணை கோர அம்மாநில அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
ஆந்திரப் பிரதேச மாநிலமானது கடந்த 2014ஆம் ஆண்டு ஆந்திரா, தெலுங்கானா என இரு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டதை அடுத்து தலைநகர் ஹைதராபாத், தெலுங்கானா வசம் சென்றுவிட்டது. இதையடுத்து, அமராவதியில் புதிய ஆந்திரத் தலைநகர் உருவாக்கப்படும் என அப்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்தார்.
ஆனால், அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் முன்னரே அமராவதி பற்றிய தகவல் கசிந்ததாகவும் இதையடுத்து திரு நாயுடு, அவரது குடும்பத்தினரோடு தெலுங்கு தேச கட்சி அமைச்சர்கள் பலரும் அப்பகுதியில் நிலங்களை வாங்கிப் போட்டதாக அமைச்சரவை துணைக்குழு தாக்கல் செய்த அறிக்கை கூறுகிறது.
அத்துடன், அமராவதி நகரின் எல்லைப் பகுதியில் நிலம் வைத்துள்ள குறிப்பிட்ட சிலர் பலனடையும் வகையில், புதிய தலைநகரின் எல்லைகளை வரையறுத்ததிலும் பல முரண்பாடுகள் காணப்படுவதாக துணைக்குழு தனது அறிக்கையில் சுட்டியுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் நிலம் கையகப்படுத்தியதில் ஏராளமான முறைகேடுகள் இடம்பெற்றதாகவும் கூறி, சிங்கப்பூர் துணையுடன் உருவாக்கப்படவிருந்த அமராவதி தலைநகர் திட்டத்தை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைமையிலான புதிய ஆந்திர அரசு கைவிட்டது.
மாறாக, நிர்வாகத்திற்கு விசாகப்பட்டினம், சட்டத்திற்கு அமராவதி, நீதித் துறைக்கு கர்னூல் என மூன்று தலைநகரங்களை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்திருந்தார். இதற்கு, அமராவதி வட்டார விவசாயிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து, கடந்த 18ஆம் தேதியில் இருந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், திரு நாயுடு, அவருடைய மகன் நரலோகேஷ், முன்னாள் அமைச்சர்கள் எனப் பலரும் தங்களின் உறவினர்கள், ஓட்டுநர்கள், பணியாளர்கள் பெயர்களில் அமராவதியில் நிலங்களை வாங்கிப் போட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறி, அவர்கள் மீது சிபிஐ விசாரணை கோர ஆந்திர அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அதற்குமுன் சட்ட ஆலோசனை கேட்கவும் திரு ஜெகன்மோகன் தலைமையிலான அமைச்சரவை முடிவுசெய்துள்ளது.
நிதியமைச்சர் பக்கன ராஜேந்திரநாத் ரெட்டி தலைமையில் அமைக்கப்பட்ட துணைக்குழு, கடந்த நான்கு மாதங்களாக அமராவதி நில முறைகேடுகள் தொடர்பில் விசாரணை நடத்தி, கடந்த வெள்ளிக்கிழமை தனது அறிக்கையைத் தாக்கல் செய்தது.
இதனிடையே, துணைக்குழுவின் அறிக்கையை நிராகரித்த திரு நாயுடு, “அவை அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள். இதன் தொடர்பில் நீதி விசாரணையை எந்த நேரத்திலும் எதிர்கொள்ளத் தயாராகவிருக்கிறோம்,” எனக் கூறியுள்ளார்.