இந்தியாவில் குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை எதிர்த்து போராட்டங்கள் நீடித்து வரும் நிலையில், ஆங்காங்கே மோதல்களும் வன்முறைச் சம்பவங்களும் பொதுச் சொத்துகள் சேதப்படுத்தப்படுவதும் இடம்பெற்று வருகின்றன.
அந்த வகையில், உத்தரப் பிரதேச மாநிலம், புலந்த்சாஹரில் கடந்த 20ஆம் தேதி நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்து, அரசாங்க வாகனங்களும் சொத்துகளும் சேதப்படுத்தப்பட்டன.
இந்நிலையில், புலந்த்சாஹரைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள், சேதப்படுத்தப்பட்ட பொதுச் சொத்துகளுக்கு இழப்பீடாக ரூ.627,057 பணத்திற்கான காசோலையை மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கி உள்ளனர்.
“இதன்மூலம், புலந்த்சாஹர் நல்லதொரு தொடக்கத்தை அமைத்துத் தந்துள்ளது. தாங்கள் செலுத்தும் வரிப் பணத்தின் மூலமே அரசாங்கச் சொத்துகள் வாங்கப்படுகின்றன என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்துவது என்பது மக்களின் சொத்துகளைச் சேதப்படுத்துவது போலத்தான்,” என்றார் மூத்த போலிஸ் கண்காணிப்பாளர் சந்தோஷ் குமார்.
இருப்பினும், உள்ளூர்வாசி களின் சொத்துகளை போலிசார் எரித்ததாக பல புகார்கள் வந்துள்ளன. அதற்குச் சான்றாக, சிசிடிவி காணொளிகளும் வெளிவந்துள்ளன.
இதனிடையே, மீரட் நகரில் போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம்களை பாகிஸ்தானுக்குச் செல்லுமாறு போலிஸ் உயரதிகாரி ஒருவர் கூறும் காணொளி வெளியாகி, சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
அதற்கு, பாகிஸ்தானுக்கு ஆதரவாக அவர்கள் முழக்கமிட்டதாலேயே தான் அப்படிச் சொன்னதாக அந்த அதிகாரி கூறினார்.