குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து இந்தியா முழுவதும் பல பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருவதால் அந்நாட்டின் சுற்றுப்பயணத்துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிற்குச் செல்வது குறித்து குறைந்தது ஏழு நாடுகள் பயண எச்சரிக்கை விடுத்துள்ளன.
கடந்த இரு வாரங்களில் ஏறத்தாழ 200,000 உள்நாட்டு, வெளிநாட்டுப் பயணிகள், நாட்டின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றான தாஜ்மஹாலுக்குச் செல்வதற்கான பயணத்தை ரத்து செய்திருப்பதாக அல்லது ஒத்திவைத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
“இவ்வாண்டு டிசம்பரில் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை 60 விழுக்காடு குறைந்துள்ளது,” என்று தாஜ் மஹால் அருகே உள்ள போலிஸ் நிலையம் ஒன்றில் பணிபுரியும் போலிஸ் கண்காணிப்பாளர் தினேஷ் குமார் கூறினார்.
இதற்கிடையே, சென்னை, பெசன்ட் நகர் பகுதியில் கோலம் போட்டு போராட்டம் நடத்திய எட்டு பேரை போலிசார் தடுத்து வைத்தனர். பெண்கள் ஐவர், ஆண்கள் மூவர் என எட்டுப் பேர் பெசன்ட் நகர் பகுதியில் நேற்றுக் காலை சாலையில் கோலமிட்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
அவர்கள் போட்ட கோலத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை, தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) ஆகியவற்றுக்கு எதிராக வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.
அப்பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் தடுத்து வைக்கப்பட்ட அந்த எண்மரும் பின்னர் விடுவிக்கப்பட்டனர். போலிஸ் அனுமதியின்றி அவர்கள் போராட்டம் செய்ததாகவும் சாலையில் வண்ணம் வரைந்ததாகவும் அனுமதியின்றி மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் சாலையில் கூடியதாகவும் போலிசார் கூறினர்.
இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி எஸ்.ஆர்.தாராபுரியை நேற்று முன்தினம் சந்திக்க சென்றபோது அம்மாநிலப் போலிசார் தம்மைத் தடுத்து நிறுத்தியதாக காங்கிரஸ் பிரமுகர் பிரியங்கா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற தாராபுரி கைது செய்யப்பட்டார்.
அவரது குடும்பத்தினரைச் சந்திக்கச் சென்றபோது தம்மைத் தடுத்து நிறுத்திய போலிசார் தம்முடைய கழுத்தைப் பிடித்து தள்ளிவிட்டதாக பிரியங்கா காந்தி சாடினார்.
இதனையடுத்து கட்சித் தொண்டர் ஒருவரின் இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்ற பிரியங்கா காந்தி, தாராபுரியின் குடும்பத்தினரைச் சந்தித்துப் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி, தாரா
புரியின் குடும்பத்தினரைச் சந்திக்கச் சென்றபோது தமக்கு விளைவிக்கப்பட்ட இடையூறு குறித்து கூறினார்.