புதுடெல்லி: நவீன இந்தியாவை உருவாக்குவதில் இளைஞர்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இளையர்களே புதிய இந்தியாவின் பலமாக உள்ளனர் என்று திரு மோடி, மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் நேற்று உரையாற்றினார்.
“இந்தியாவிற்கு இளைஞர்களின் பங்கு மிகவும் முக்கியம் வாய்ந்தது. இளைஞர்கள் இந்த நாட்டின் அரசியலமைப்பை மதிப்பவர்களாக உள்ளனர். அரசியலில் ஒரு சார்பு என்பதை அவர்கள் ஏற்பதில்லை. இந்த நாட்டை இளைஞர்கள் முன்னெடுத்து செல்கின்றனர்.
“புதிய இந்தியாவை இளைஞர்கள் உருவாக்கி வருகின்றனர். வரும் அத்தியாயம் இளைஞர்கள் கையில்தான் உள்ளது. இளைஞர்கள் ஆக்க சக்தியாக விளங்குகின்றனர். அழித்தல், குழப்பம், குற்றச்செயல்கள் ஆகியவற்றை இளையர்கள் விரும்புவதில்லை.
இந்தியாவுக்கான புதிய சகாப்தம் இளைஞர்களின் வளர்ச்சிக்கு மட்டுமல்ல, இளைஞர்களின் திறன்களால் இயக்கப்படும் தேசத்தின் வளர்ச்சியாக இருக்கும் என்று தான் நம்புவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். இளைஞர்கள் தற்போது சமூகவலைத்தளங்களை முக்கிய அங்கமாக வைத்துள்ளனர். இது சமூகவலைத்தள காலமாக உள்ளது,” என்றும் திரு மோடி குறிப்பிட்டார்.
அண்மையில் நடந்த சூரியகிரகணம் பற்றியும் திரு மோடி தமது உரையில் பேசியுள்ளார்.
“இது குறித்து நான் விஞ்ஞானிகளுடன் கலந்து உரையாடினேன். வான சாஸ்திரம் நமது நம்பிக்கையில் ஒன்றாக திகழ்கிறது. சூரியன், சந்திரன், பூமியின் இயக்கம் கிரகணங்களை மட்டும் தீர்மானிக்கவில்லை, பல விஷயங்களும் அவற்றுடன் தொடர்புடையவை. நாம் அனைவரும் அறிவோம்,” என்றும் திரு மோடி கூறினார்.
சூரியனின் இயக்கத்தின் அடிப்படையில், ஜனவரி நடுப்பகுதியில் இந்தியா முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது. சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா என்ற சாட்டிலைட்டை இஸ்ரோ விண்ணில் செலுத்த உள்ளது. கடந்த 6 மாதங்களில் சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா கூட்டம் வெற்றிகரமாக நடந்துள்ளது.
ஆக்கபூர்வமாக செயல்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களு்ககு திரு மோடி வாழ்த்து தெரிவித்துக்கொண்டார்.
இந்தியாவின் கன்னியாகுமரி கடல் பாறையில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவகம் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இந்த இடம் கடந்த பல ஆண்டுகளாக நாட்டுக்கு பெருமை சேர்ப்பதாகவும் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் மையமாகவும் உள்ளது.
நாட்டின் கலாசாரத்தை விளக்கும் பல்வேறு விழாக்கள் இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகின்றன. பொங்கல் திருநாள், திருவள்ளூர் ஜெயந்தி போன்ற விழாக்களை கொண்டாடுவோருக்கும் அவர் தமது வாழ்த்தினை தெரிவித்துக்கொண்டார். பிரதமர் மோடி பிரதமராக பொறுப்பேற்றது முதல் மன்கிபாத் என்ற ரேடியோ நிகழ்ச்சி மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிறு அன்று பேசி வருகிறார். இது 60 வது உரையாகும். 2019ஆம் ஆண்டில் அவர் ஆற்றிய கடைசி உரை இது.