புதுடெல்லி,: பழமையான காங்கிரஸ் கட்சி நிறுவப்பட்டு 135-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் நிறுவன தினத்தை உற்சாகமாக கொண்டாடினர். டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கட்சியின் மூவர்ண கொடியை ஏற்றினார்.
பின்னர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகளுக்கு சோனியா காந்தியும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் இனிப்புகள் வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மூத்த தலைவர்கள் ஏ.கே.அந்தோணி, மோதிலால் வோரா, ஆனந்த் சர்மா உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
காங்கிரஸ் கட்சி 135வது ஆண்டு நிறைவை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில், ‘அரசியல்சாசனத்தை காப்பாற்றுவோம் இந்தியாவை காப்பாற்றுவோம்’ என்ற தகவலை மக்களுக்கு கொண்டுசெல்லும் வகையில் நாடு முழுவதும் பேரணி நடத்தப்பட்டது.
ராகுல் காந்தி டுவிட்டர் பக்கத்தில் இத்தனை ஆண்டுகளும் தன்னலமற்ற பங்களிப்பை வழங்கிய லட்சக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
ராகுல் காந்தி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான பேரணியில் பங்கேற்றார். காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி லக்னோவில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் கலந்துகொண்டார். உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் கட்சி கூட்டத்திலும் அவர் கலந்துகொண்டு பேசினார்.