ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தின் 11வது முதலமைச்சராக ஹேமந்த் சோரன் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
பதவியேற்பு விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா உள்பட பலர் பங்கேற்றனர்.
ஜார்க்கண்டில் உள்ள 81 சட்டமன்ற தொகுதிகளுக்கு அண்மையில் தேர்தல் நடைபெற்றது.
கடந்த நவம்பர் 30-ந்தேதி தொடங்கி டிசம்பர் 20-ஆம் தேதி வரை 5 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பாரதிய ஜனதா கட்சிக்கும், காங்கிரஸ்-ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. இதில் ஆளுங்கட்சியான பாஜக தோல்வியைத் தழுவியது.
ஜார்க்கண்ட் முக்தி மோர்சா, காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி அபார வெற்றி பெற்றது. இந்தத் தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சித் தலைவரும் முன்னாள் முதல் அமைச்சருமான ஹேமந்த் சோரன் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் மிக அதிகமான வாக்குகளை வாங்கி வெற்றி பெற்றார். இதையடுத்து ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சித் தலைவர் ஹேமந்த் சோரன் முதல்வராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இவர் அம்மாநில ஆளுநர் திரவுபதி முர்முவை சந்தித்து ஆட்சி அமைக்க ஆதரவு கோரினார். பின்னர் ஜார்க்கண்ட் மாநிலத்தின் 11-வது முதலமைச்சராக ஹேமந்த் சோரன் நேற்று மதியம் பதவியேற்றார். அவருக்கு மாநில ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், மேற்கு வங்காள முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்கள் கலந்து கொண்டனர்.