புதுடெல்லி: வங்கிகள் எந்த பயமும் இல்லாமல் கடன் வழங்க வேண்டும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். டெல்லியில் நேற்று நிதி அமைச்சின் கூட்டம் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது.
இதில் இந்திய வங்கிகள் சங்கம், சி.பி.ஐ. இயக்குனர் மற்றும் நிதித்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
முக்கியமாக வங்கி மோசடிகளை தவிர்ப்பது தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
வங்கிகள் எந்த பயமும் இல்லாமல் கடன் வழங்க வேண்டும். எடுக்கப்படும் விவேகமான வர்த்தக முடிவுகள் நிச்சயம் பாதுகாக்கப்படும். உண்மையான, நேர்மையான முடிவுகள் எடுக்கும்போது சி.பி.ஐ., மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம், தலைமை கணக்காயர் மற்றும் தணிக்கை அலுவலர் ஆகிய 3 ‘சி’க்களுக்கு வங்கி அதிகாரிகள் காரணம் இல்லாமல் பயப்படத் தேவையில்லை என்று நிதி அமைச்சர் கூறினார்.
அரசாங்கத்தால் எடுக்கப்படும் விரிவான சீர்திருத்த நடவடிக்கைகள் வங்கிகளை உதவியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“வங்கிகள் அச்சத்தை தணிக்க அது தொடர்பான ஆலோசனைகளை எங்களிடம் பெறலாம்,” என்று சி.பி.ஐ இயக்குநர் கூறினார்.
அங்கீகரிக்கப்படாத தகவல்கள் மற்றும் அதனால் ஏற்படும் தொந்தரவுகளை தவிர்ப்பதற்காக சி.பி.ஐ. ஒரு நடைமுறையை வகுக்க வேண்டும்.
இதற்காக சி.பி.ஐ. அனுப்பும் நோட்டீசுகளில் ஒரு பதிவு எண்ணும் இருக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. வங்கி மோசடிக்கு பொறுப்பானவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கும்போது உண்மையான வர்த்தக தோல்விகள் மற்றும் குற்றத்துக்குரிய சம்பவங்களுக்கு இடையேயான வேறுபாட்டை சி.பி.ஐ.யும் உணர வேண்டும் என்றும் இயக்குநர் கூறினார்.
அதேபோல பொதுத்துறை வங்கிகள் மோசடி சம்பவங்கள் குறித்து சி.பி.ஐ.க்கு ஒரு குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரியில் புகார்களை அனுப்பலாம் என்றும் அவர் சொன்னார்.
இந்த கூட்டத்துக்கு பின்னர் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வங்கிகள் கையகப்படுத்தும் சொத்துகளை வெளிப்படையாக வும் நேர்மையாகவும் ஆன்லைனில் ஏலம் விடுவதற்காக இணையத்தள முகவரியையும் தொடங்கி வைத்தார்.
பொதுத்துறை வங்கிகள் கடந்த 27- ஆம் தேதி வரை மொத்தம் 35 ஆயிரம் சொத்துகளை இந்த ஆன்லைனில் ஏலம் விடும் இணையத்தள பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.
கடந்த மூன்று நிதி ஆண்டுகளில் வங்கிகள் கடன் வாங்கியவர்களிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட சொத்துகளின் மதிப்பு ரூ.2.3 லட்சம் கோடி என்றும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.