புதுடெல்லி: கடும் குளிர் காரணமாக தலைநகர் புதுடெல்லி உள்ளிட்ட இந்தியாவின் வடபகுதிகளில் ‘சிவப்பு எச்சரிக்கை’ விடப்பட்டுள்ளது. டெல்லியில் வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை குறைந்ததால் குளிரில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்படைந்துள்ளது. கடந்த நூறு ஆண்டுகளில் 1997 டிசம்பரிலும் பின்னர் இந்த மாதமும்தான் அதிகபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியசிற்கும் குறைவாகப் பதிவாகியுள்ளது.
சூரியனையே பார்க்க முடியாத அளவுக்கு பனிமூட்டம் உள்ளதால் சாலையோரங்களில் தீ மூட்டி குளிர்காய்ந்து வருகின்றனர். சாலை ஓரங்களில் வசிக்கும் மக்களின் பாடு திண்டாட்டமாகியுள்ளது.
ஹரியானா, உத்தரப் பிரதேசம், பஞ்சாப், சண்டிகர், பீகார் உள்ளிட்ட மாநிலங்களிலும் கடுமையான குளிர் இருக்கும் என்பதைக் குறிக்கும் வகையில் சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் இம்மாதம் மட்டும் குளிரின் தாக்கத்தால் 28 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரின் பல பகுதிகளில் நீர்நிலைகள் உறைநிலைக்குச் செல்லும் அளவிற்கு குளிர் வாட்டி வதைத்து வருகிறது.
இன்று முதல் குளிரின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் அந்தந்த மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி உள்ளன. டெல்லியில் 500க்கும் மேற்பட்ட விமானங்கள் நேற்று தாமதமாக இயக்கப்பட்டன; ஐந்து விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.