புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி முன்வைக்கும் அரசியலால் இந்தியப் பொருளியல் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக பிரெஞ்சு பொருளியல் நிபுணர் கை சோர்மன் தெரிவித்துள்ளார்.
மேலும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய அச்சம் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
உலகின் மிக முக்கியமான பொருளியல் நிபுணர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார் கை சோர்மன். இந்தியாவின் பொருளியல்நிலை குறித்து அவர் தற்போது கருத்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் வளர்ச்சி பெரும் சரிவைச் சந்தித்துள்ளதாக அவர் கூறுகிறார்.
“தொடக்கத்தில் மோடி இந்திய தொழில் முனைவோர்களுக்கு சாதகமான பொருளியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார். ஊழல் ஒழிப்பு தொடர்பாக அவருடைய முன்னெடுப்புகள், ‘மேக் இன் இந்தியா’ போன்றவை குறிப்பிடத்தக்கவை.
“ஆனால், திடீரென்று நாட்டின் பொருளியல் சார்ந்த நோக்கத்தில் இருந்து விலகி, அரசியல் நோக்கத்தில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார். அவருடைய அரசியல் நடவடிக்கைகளால் உலகளவில் இந்தியாவுக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது,” என்கிறார் கை சோர்மன்.
மோடியின் அரசியல் செயல்பாடுகளே இந்தியாவின் தற்போதைய பொருளியல் மந்தநிலைக்கு காரணம் என்று குறிப்பிட்டுள்ள அவர், இந்திய அரசு நாட்டின் வளர்ச்சி குறித்து பொய்யான தகவல்களை வெளியிட்டு வருவதாகவும் விமர்சித்துள்ளார்.
இந்திய அரசு வெளியிடும் புள்ளிவிவரங்கள் எவையும் நம்பத் தகுந்தவையாக இல்லை என்கிறார் கை சோர்மன்.
இந்தியா வேகமாக வளரும் நாடுகளில் ஒன்றாக அடையாளப்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது பெரும் சரிவை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
“வேலையின்மை கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவில் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், வறுமை பெரும் அச்சுறுத்தலாக மாறி உள்ளது,” என்று கை சோர்மன் மேலும் தெரிவித்துள்ளார்.