அகமதாபாத்: காவல்துறையால் நித்தியானந்தா தேடப்பட்டு வரும் நிலையில், அவரது ஆசிரமம் இடித்துத் தள்ளப்பட்டது.
குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் நித்தியானந்தாவின் ஆசிரமம் இயங்கி வந்தது. ஒரு தனியார் அறக்கட்டளையிடம் இருந்து சட்ட விரோதமாக குத்தகைக்கு பெறப்பட்ட நிலத்தில் அவர் அந்த ஆசிரமத்தை அமைத்திருந்தார்.
இது குறித்து அகமதாபாத் நகர மேம்பாட்டு ஆணையத்துக்கு புகார் வந்ததாகத் தெரிகிறது.
அதன் அடிப்படையில், ஆணைய அதிகாரிகள் நித்தியானந்தாவின் ஆசிரமத்தை இடித்துத் தரைமட்டம் ஆக்கினர்.
நித்தியானந்தா நாட்டைவிட்டு வெளியேறி வெளிநாடு ஒன்றில் தங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. தொடக்கத்தில் இத்தகவலை இந்திய மத்திய அரசு மறுத்து வந்தது.
இந்நிலையில், வெளிநாட்டில் இருக்கும் நித்தியானந்தாவைப் பிடிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது.
அனைத்துலக காவல்துறையான ‘இன்டர்போல்’ மூலம் இதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதனால் நித்தியானந்தாவுக்கு நெருக்கடிகள் அதிகரிக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவர் வழக்கம்போல் இணையம் வழி தமது ஆதரவாளர்கள் மத்தியில் உரை நிகழ்த்தி வருகிறார்.
அவர் எங்கு இருக்கிறார் என்பது இதுவரை உறுதியாகத் தெரியவில்லை. ஆசிரமம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டதால் நித்தியானந்தாவின் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.